அவர் வேட்டு வேட்டபின் - அவர்கள் அனைவரும் (ஒருவர்க்கொருவர்) விரும்பி மணஞ்செய்து கொண்ட பின்பு; வேந்தனும் - சனக மன்னனும்; மேல்நாள் கூட்டிய கீர்த்தி கொடுத்திலன் அல்லால் - முன்னே. பல்லாண்டுகளாகத் தான் ஈட்டி வைத்திருந்த புகழ் ஒன்றை மட்டுமே கொடாமல் வைத்துக்கொண்டானே அல்லாமல்; ஈட்டிய மெய்ப்பொருள் உள்ளன எல்லாம் - தான் இத்துணைக் காலமும் சத்தியத்தோடு ஈட்டி வைத்திருந்த அத்தனை பொருள்களையும்; வேட்டவர் வேட்டவை வேண்டு அளவு ஈந்தான் - விரும்பினவர் விரும்பினவற்றையெல்லாம் அவர்கள் விரும்பும் அளவும் (பெறுக எனக்) கொடையாகக் கொடுத்தான். இராமன் முன்னமே சீதையை கன்னிமாடத்தில் கண்டு. விரும்பிய பின்பு. காதல் மணம் புரிந்தான் எனக்கூறிய தமிழ் மரபுக்கேற்ப. தம்பியர் மணங்களும் ஒருவர்க்கொருவர் விரும்பிய பின்பே நிகழ்ந்தன என்பார். “வேட்டு அவர் வேட்டபின்” என்றார். கீர்த்தி - மிகுபுகழ். கொடுப்பவன் மிகுபுகழை எக்காரணம் கொண்டும் கொடுக்க இயலாது; கொடுக்கக் கொடுக்க து மிகுமாதலின். “கூட்டிய சீர்த்தி கொடுத்திலன் அல்லால்” என்று அழகுறக் கூறினார். 102 |