ஒன்றைக்கொடுத்து. அக்கொடையால். பெறுவார் பெறும்இன்பத்தைக் கண்டு தாம் மகிழும் இன்பத்திற்கு ஈடான இன்பம் உலகில் இல்லையாதலின். “ஈந்து. அளவில்லதோர் இன்பம் நுகர்ந்து” என்றார். “ஈந்து உவக்கும் இன்பம்” (திருக். 228) எனும் அருமைக்குறளும் அதற்குப் பரிமேலழகர் வரைந்த உரையும் இங்கு நோக்கத் தகுவன. கேள்விச் செல்வம் மிக்க தவ முனிவரோடு தத்துவச் செல்வங்களை ஆய்ந்து நாள் போவது தெரியாமல் சம்பந்தியாகிய சனகன் நகரில் தசரதன் தங்கியிருந்தான் என்பார். “மெள்ளத் தேய்ந்தன நாள் சில” என்றார். தன் நகரம் செல்வதைக் கூட மறக்கச்செய்தது கலைவல்ல முனிவர்களிடம் கேட்ட கேள்விச் செல்வம் என்பது குறிப்பு. 103 |