பக்கம் எண் :

802பால காண்டம்  

சனகன்    தரு(¬)தயலும்-  சனகன் தந்த பெண்ணாகிய சீதையும்;
தான் ஆவது  ஒர் வகையே  நனி  நானா விதம் உறு போகமும்
-
இராமனும்.   எடுத்த   அவதாரத்திற்கேற்ப    மிகுதியான   பல்வகைப்
போகங்களையும்;  நுகர்கின்ற   அந்நாள்   வாய்   -அநுபவிக்கின்ற
அக்காலத்திலே; முனிகோசிகன் ஆனாமறை நெறி ஆசிகள் அருளி -
நெறி   நன்கு  உணர்ந்த  விசுவாமித்திர  முனிவன்   அழியாத   வேத
ஆசிகளை  (மணமக்களுக்கு)  அருளிச்செய்து  விட்டு;  போனான்   -
புறப்பட்டான்; வடதிசைவாய்  உயர்  பொன்மால் வரை  புக்கான் -
வடக்குத்     திசையில்     சென்று     உயர்ந்தோங்கிய     அழகிய
பெருமலையாகிய     இமயமலையை     (தவஞ்செய்தற்    பொருட்டுச்)
சென்றடைந்தான்.

“தானும்”  என்பதில்   உள்ள   உம்மை  தொக்குத்  “தான்”  என்
நின்றது. அது. இராமனைக் குறித்தது.                            1

                                 தயரதனின் அயோத்தி புறப்பாடு
 

1264.அப் போதினில். முடி மன்னவன்.
   ‘அணி மா நகர் செலவே.
இப்போது. நம் அணிகம்தனை
   எழுக!’ என்றுஇனிது இசையா.
கைப் போ தகம் நிகர் காவலர்
   குழு வந்து. அடி கதுவ.
ஒப்பு ஓத அரு தேர் மீதினில்.
   இனிது ஏறினன். உரவோன்.

 

அப்போதினில்  - அந்நாள்களில் ஒரு நாளில்; முடி மன்னவன் -
மகுடம்  அணிந்த  தசரதச்  சக்கரவர்த்தி;  அணிமா நகர் செலவே -
‘அழகிய   மாநகராகிய   அயோத்திக்குச்   செல்ல;   இப்போது  நம்
அனிகம்தனை   எழுக   
-   இப்பொழுது.  நம்  சேனைகள்  யாவும்
(நம்முடன்) புறப்படுக; என்று இனிது இசையா - என்று  இனிமையுடன்
கூறி;  கைப் போதகம் நிகர்காவலர் குழு - (சனகனிடம் விடைபெற்று)
துதிக்கைகளையுடைய யானைகளைப்  போன்ற  அரசர்களிடன்  கூட்டம்;
அடிகதுவ  
-  தனது  பாதங்களை  வணங்கி  நெருங்கிச் சூழ்ந்து  வர;
ஒப்பு  ஓத அரு  தேர்  மீதினில்
- உவமை கூறற்கு அரிய (அழகிய
தன்)  தேரின்மேல்;   உரவோன்   இனிது   ஏறினன்   -  வலிமை
மிக்கோனாய். நெஞ்சு இனிக்க ஏறினான்.

இராமனின்    திருமணம். தசரத வேந்தனுக்குப்  புதிய ஆற்றலையும்.
பெருமகிழ்வையும்   தந்து   நெஞ்சினிக்க   வைத்த   நிகழ்ச்சியொன்று
ஆதலின்.   “அந்த   இனிமை   நிகழ்வினை   நெஞ்சில்   சுமந்தவாறு
அயோத்தி   புறப்படத்   தேர்   ஏறினான்   என்பார்.   “தேர்மீதினில்
உரவோன்  இனிது ஏறினான்” என்றார். இசையா  -  இசைத்து.  செய்யா
எனும் வினையெச்சம்.                                         2