மறவோன் - வலிமை மிக்க தசரத வேந்தன்; தன் மக்களும் மருமக்களும் தன்கழல் நனிதழுவ - தன்னுடைய புதல்வர்கள் நால்வரும். மருகிகள் நால்வரும் தனது பாதங்களை நன்கு வணங்கி உடன் வரவும்;மன் மக்களும் அயல் மக்களும் வயின் மொய்த்திட - அரச குமாரர்களும் மற்றைய குடிமக்களும் தன் பக்கங்களில் நெருங்கி வரவும்; மிதிலைத் தொல்மக்களும் - மிதிலை நகரத்தில் பன்னெடு நாள் வாழ்ந்த பெரியோர்களும்; மனம் உக்கு - மனம் நெகிழ்ந்து; உயிர் பிரிவு என்பதோர் துயரின் - உயிர் உடம்பை விட்டுப் பிரியும் துன்பம் போன்றதொரு துன்பமெனும்; வன்மைக் கடல்புக - வலிய கடலுள் நுழையவும்; உய்ப்பது ஒர் வழிபுக்கனன் - அயோத்திக்குச் செல்லுவதோர் வழியை யடைந்தான். தசரதன். இராமன். தம்பியர். சீதை முதலியோர் உயிர்போல நேசிக்கப்பட்டனர் ஆதலின். அவர் பிரிவு. உடலிலிருந்து உயிர்பிரிவது அன்ன வேதனையை மிதிலை மக்களுக்குத் தந்தது என்பது தோன்ற. “உயிர் பிரிவு என்பதோர் துயரின் வன்மைக் கடல்புக” என்றார். “சாதலின் இன்னாதது இல்லை” (திருக். 230) என்பார் வள்ளுவனாரும். அப்பிரிவுத் துயரைப் பொறுத்துக் கொள்ளும் வலிமையைப் பெற்றிருந்தான் தசரதன் என்பார். “மறவோன்” என்றார். உவமையணி. 3. தம்பியரொடு இராமன் சென்ற காட்சி |