போரின் மிசை எழுகின்றது- போர் எழுந்தால் எழுகின்றதாகிய; ஒர் மழுவின் சிகை புகைய - ஒப்பற்றதான அவன் கோடரியின் உச்சியில் புகை எழவும்; தேரின்மிசைமலைசூழ் வரு கதிரும் - தனது ஒற்றைச் சக்கரத் தேரில் ஏறி. மேருமலையை வலம்வரும் கதிரவனும்; திசை திரிய - (இவனது உக்கிரத்தால்) திசைதடுமாறிச் செல்லவும்; நீரின் மிசை வடவைக்கனல் - கடல் நீரின் மேலெழுந்து தோன்றும் தன்மையதான வடவாமுகாக்கினியும்; நெடுவான் உற முடுகி - நீண்ட வானளாவ விரைந்து; பாரின் மிசை வருகின்றது ஒர்படி - (எழுந்து) பூமியின் மேலே (நடந்து) வருகின்றதொரு விதம் போல; வெஞ்சுடர் படர - தன் உடலிலிருந்து வெம்மை ஒளி வீசவும்- யுக முடிவில். கடலில் குதிரை முகவடிவில் எழும் பெருந்தீயால் உலகு அழியும் என்பதும் அத்தீயை வடவா முகாக்கினி என்றழைப்பதும் புராண மரபு ஆதலின். “நீரின் மிசை வடவைக் கனல் நெடுவானுற முடுகி. பாரின் மிசை வருகின்றது ஒர்படி” என்றார். புயல் எழுகையில் கடல் அலைகளின் உச்சியில் தீ எழும் என்பதை இன்றைய அறிவியல் ஆந்திரப் புயலில் கண்கூடாகக் கண்டு உணரத் தொடங்கியுள்ளமை குறிக்கொள்ளத்தக்கது. குதிரையினுடைய - கழுத்து வளைவு போல. கடல் அலைகள் உச்சி வளைத்து வருவதால் குதிரை முகத்திற்கு அதனை உவமிப்பது பொருந்துவது காண்க. தம்மைத் தற்குறிப்பேற்ற அணி. சிகை புகைய. திசை திரிய. கனல் நெடுவான் உற முடுகி. வருகின்றது ஒர்படி வெஞ்சுடர் படர எனக் கூட்டுக. 10 |