பக்கம் எண் :

836பால காண்டம்  

சென்று;     இராமன் சேவடிப்  பூவினை -  இராமபிரானது  சிவந்த
திருவடி  மலர்களை;  சென்னியில்  புனைந்து  -  தன் திருமுடியிலே
தரித்து  (வணங்கி);அங்கு அவன் அலது ஆவி இல்லை ஆதலால் -
அவ்விடம்  உள்ள  அந்த  இராமபிரானையல்லாமல்   (தனக்கு)  வேறு
உயிர் இல்லையாகையால்;ஓவல் இல் உயிர் பிரிந்து - (ஒரு பொழுதும்)
நீங்குதல்  இல்லாத  உயிரைப் பிரிந்து; உடல் சென்று என்ன - உடல்
தனித்துச்  சென்றாற்  போல;  போயினான்  -  (இராமனை   விட்டுப்
பரதன்) புறப்பட்டான்.

உடலைப்   பிரிந்து உயிர் செல்லல் இயல்பாயிருக்க. இங்கு உயிரைப்
பிரிந்து   உடல்   செல்வதைக்   காண்க   என்கிறார்   கவிஞர்பிரான்.
இல்பொருள்  உவமையணி.  இராமன்   பரதனின்   உயிர்  என்பதனை.
“கானிடைப்  போகிய  கமலக்  கண்ணனைத் தான்  உடை  உயிரினைத்
தம்பி  கண்டனன்”  (கம்ப. 10260) எனும்  மீட்சிப்  படலப்  பாடலாலும்
உணரலாம்.  பக்தர்  முடியில்  சூடும்  பூ  எது  என்பதனை.  “சேவடிப்
பூவினைச்   சென்னியில்    புனைந்து”   என்பதனால்   உணர்த்தினார்.
இறைவனும் அடியவரும் உயிரும் உடலும் ஆவர்.                 48

                                         கேகய நாடு அடைதல்
 

1311.உளை விரி புரவித் தேர் உதாசித்து எனும்
வளை முரல் தானையான் மருங்கு போதப் போய்.
இளையவன் தன்னொடும். ஏழு நாளிடை.
நளிர் புனல் கேகய நாடு நண்ணினான்.

 

உளை     விரி புரவித் தேர்- பிடரி மயிர்கள் பரந்த குதிரைகள்
பூட்டிய    தேரில்;    உதாசித்து   எனும்   -   உதாசித்து   என்று
சிறப்பிக்கப்படுகிற;  வளைமுரல்  தானையான்  - சங்குகள்  முழங்கும்
சேனைக்   குடையவன்;   மருங்கு   போத  -  தன்  அருகில்  வர;
இளையவன்    தன்னொடும்    போய்    
-    தன்    தம்பியான
சத்துருக்கனனோடும் சென்று;  ஏழு நாளிடை நளிர்புனல் கேகய நாடு
நண்ணினான்  
-  ஏழு  நாட்களிலே  தண்ணிய நீர்வளம் மிக்க கேகய
நாட்டையடைந்தான் (பரதன்).
   

அழைப்பு.   பரதனுக்கேயாயினும் சத்துருக்கனனும்  அழையாமலேயே
உடன்  சென்றது.  அடியார்க்கு   அடியன்   ஆகும்.  சத்துருக்கனனின்
திறம்   உணர்த்தும்.   பரதனும்    சத்ருக்கனனும்   வடிவும்   நிழலும்
போல்வர். ஆதலின் பரதனுடன் பிரியாமற்  செல்லல்  சத்துருக்கனனுக்கு
நேர்ந்தது.  இருவரும்  இணை  பிரியாதவர்    என்பதனை.   “பரதனும்
இளவலும்  ஒரு  நொடி  பகிரா வரதனும் இளவலும்  என  மருவினரே”
(கம்ப.  307)  என  முன்னும்   உரைத்தார்.  இலக்குவன்”  பகவானுக்கு
அடிமை”   எனும்  பண்புச்   சிறப்பை   விளக்கவும்.   சத்துருக்கனன்.
“பாகவதர்க்கு   அடிமை”  எனும்   பன்புச்   சிறப்பினை   விளக்கவும்
படைக்கப்பட்ட  பாத்திரங்கள்   எனவும்  பிரபந்தப்  பேருரையாளர்கள்
விளக்குவர்.                                                49