பக்கம் எண் :

112அயோத்தியா காண்டம்

ஒலியும் அஞ்சப்பெற்ற அழகிய மொழியையுடைய கைகேயியின் மாளிகைக்கு;
வந்தான் -
வந்தடைந்தான்.

     மறுநாள் இராமனுக்கு முடிசூட்டுவதற்குரிய  விழா எற்பாடுகளைச்
செய்வதில் காலம் கழிந்தமையால்இரவில் காலந் தாழ்த்துக் கைகேயியின்
இருப்பிடம் நோக்கி  மகிழ்ச்சியோடு தயரதன் சென்றான். ஏழை - பெண்;
பிறர் பேச்சைக் கேட்டு ஆராயாது  நடத்தலின் அறிவில்லாதவள் என்னும்
குறிப்பும் புலப்பட வைத்தார். மடங்கல் - பிடரிமயிர் மடங்கியிருக்கப்
பெற்றது;  காரணப் பெயர்.                                       5

1496. வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப, வந்து ஆங்கு,
ஏயின செய்யும் மடந்தைமாரொடு ஏகி,
பாயல் துறந்த படைத் தடங்கண் மென் தோள்,
ஆயிழைதன்னை அடைந்த ஆழி மன்னன்.

     மன்னர் வணங்கி வாயிலில் நிற்ப - தன்னுடன் வந்த அரசர்கள்
தொழுது அந்தப்புரவாயிலில் நிற்க; ஆங்கு வந்து - அவ்விடத்தில்
ஓடிவந்து; ஏயின செய்யும்  மடந்தைமாரொடுஏகி - கட்டளையிட்ட
வற்றைச் செய்யும் பணிப்பெண்களோடு சென்று; பாயல் துறந்த -
படுக்கையைவிட்ட;  படைத் தடங் கண் - வேல் போலும் கூரிய பெரிய
கண்களையும்; மெல்தோள்- மென்மையான தோள்களையும் உடைய; ஆய்
இழைதன்னை -
கைகேயி; அடைந்த ஆழிமன்னன்- சேர்ந்த அந்தச்
சக்கரவர்த்தி  (எடுக்கலுற்றான் என அடுத்த பாடலோடு முடியும்)

     தயரதன் மாளிகையின் உள்ளே சென்று, தரையிலே அலங்கோலமாகக்
கிடந்த கைகேயியைக் கண்டான்என்பது கருத்து.  அந்தப்புரத்தில் அயல்
ஆடவர் செல்ல இயலாதாகலின் மன்னர் வெளியே நின்றனர். ஆயிழை -
பெண் என்னும் பொருட்டாய் நின்றது, கைகேயி  அணிகலன்களைத் துறந்து
கிடத்தலின்.                                                   6

கைகேயியைத் தயரதன் எடுத்தலும், அவள் மண்ணில் வீழ்தலும்  

1497.அடைந்து , அவண் நோக்கி,
     ‘அரந்தை என்கொல் வந்து
தொடர்ந்தது?’ எனத் துயர்கொண்டு
     சோரும் நெஞ்சன்,
மடந்தையை, மானை எடுக்கும்
     ஆனையேபோல்,
தடங்கை கள் கொண்டு தழீஇ,
     எடுக்கலுற்றான்.