தீயவை யாவையினும் சிறந்த தீயாள் - கொடியவை என்று சொல்லப்படும் எல்லாவற்றிலும்மேம்பட்ட கொடியவளான கைகேயி; ‘ஏய வரங்கள் இரண்டின் - (நீ) கொடுத்த இரு வரங்களுள்;ஒன்றினால் - ஒரு வரத்தினால்; என் சேய் அரசு ஆள்வது - என்மகன் பரதன் நாட்டை ஆளுதல் வேண்டும்; ஒன்றால் - மற்றொன்றினால்; சீதை கேள்வன் போய் வனம்ஆள்வது - சீதைக்குக் கணவனாகிய இராமன் (இந்நாட்டை விட்டுச்) சென்று காட்டை ஆளுதல் வேண்டும்;எனப் புகன்று - என்று சொல்லி; நின்றாள் - மனங் கலங்காமல் உறுதியாக நின்றாள். தீயவை - நெருப்பு, கூற்றுவன், நஞ்சு, பாம்பு முதலியன ‘சிறந்த’ என்பது கொடிய என்னும்பொருளைத் தரும், ‘நல்ல பாம்பு’ ‘நல்ல வெயில்’ என்பவற்றில் நல்ல என்பது கொடிய என்னும் பொருளைத் தருவது போல, இத்தகைய கொடிய சொற்களை அஞ்சாது சொல்லி நிற்றல் இவளையன்றிப் பிறர்க்கு அரிது என்பதனால் ‘புகன்று நின்றாள்’ என்றார். ஆள்வது வியங்கோள் வினைமுற்று. 14 தயரதன் உற்ற துயரம் 1505. | நாகம் எனும் கொடியாள், தன் நாவின் ஈந்த சோக விடம் தொடர, துணுக்கம் எய்தா, ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து, அராவின் வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான். |
நாகம் எனும் கொடியாள் - பாம்பு என்று சொல்லத்தக்க கொடியவளாகிய கைகேயி; தன் நாவின் ஈந்த - தனது நாக்கினின்றும் வெளியிட்ட; சோக விடம் தொடர -துன்பத்தைத் தரும் சொல்லாகிய நஞ்சு தன்னைப் பற்றிக்கொள்ள; துணுக்கம் எய்தா -நடுக்கம் அடைந்து; ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து - தன் உடல் முழுவதும் வெதும்பிச் சோர்ந்து; அராவின் வேகம் அடங்கிய - நச்சுப் பாம்பினால் தன் ஊக்கம் தணியப்பெற்ற; வேழம் என்ன - யானை போல; வீழ்ந்தான் - (தயரதன் கீழே) விழுந்தான். இதனால் கைகேயியின் சொற்களில் இருந்த கொடுமை கூறப்பட்டது. சோக விடம் - உருவகம்.துயர்க் காரணம் சொற்களாதலால் ‘நாவின் வந்த விடம்’ என்று வேற்றுமையணியாகக் கூறினார்.ஆகம் வெந்து வீழ்ந்தான்’ - சினை வினை முதலோடு முடிந்தது. அராவின் - இன் ஏதுப் பொருளில் வந்தது. 15 1506. | பூதலம் உற்று, அதனில் புரண்ட மன்னன் மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார்? வேதனை முற்றிட, வெந்து வெந்து, கொல்லன் ஊது உலையில் கனல் என்ன, வெய்து உயிர்த்தான். |
|