பூதலம் உற்று - தரையில் விழுந்து; அதனில் புரண்ட மன்னன் - அதன்மீது நிலைகொள்ளாதுஉருண்ட அரசனாகிய தயரதனது; மாதுயரத்தினை - பெருந்துன்பத்தினை; சொல்ல வல்லார்யாவர் - அளவிட்டுச் சொல்ல வல்லவர் யார்? (ஒருவரும் இல்லை); வேதனை முற்றிட -துன்பம் முதிர்ச்சி அடைய; வெந்து வெந்து - மனம் மிக வெதும்பி; கொல்லன் ஊதுஉலையில் கனல் என்ன - கருமான் (துருத்தியால் ஊதுகின்ற உலைக்களத்துத் தீயைப்போல; வெய்து உயிர்த்தான் - வெப்பம் மிக்க பெருமூச்சு விட்டான். இது கவிக்கூற்று, தயரதன் நெட்டுயிர்ப்பின் வெம்மைக்குக் கொல்லனது உலைக்களம் உவமை. உலைத்தீ ஊதுந்தொறும் மேலெழுந்து மீண்டும் அடங்குவது போல, மன்னனது வெப்பம் மிக்க உயிர்ப்பு மிக்கும் அடங்கியும் நிகழ்ந்தது. வெந்து வெந்து - அடுக்கு மிகுதிப்பொருளைக் காட்டுவது. 16 1507. | உலர்ந்தது நா; உயிர் ஓடலுற்றது; உள்ளம் புலர்ந்தது; கண்கள் பொடித்த, பொங்கு சோரி; சலம் தலைமிக்கது; ‘தக்கது என்கொல்?’ என்று என்று அலந்து அலையுற்ற, அரும் புலன்கள் ஐந்தும். |
நா உலர்ந்தது - (தயரதனுக்கு) நாக்கு வறண்டது; உயிர் ஓடல் உற்றது - உயிர்போகத் தொடங்கியது; உள்ளம் புலர்ந்தது - மனம் வாடியது; கண்கள் பொங்குசோரிபொடித்த - கண்கள் மிகுதியாகக் குருதி சிந்தின; சலம் தலைமிக்கது - கவலை மிகுந்தது; அரும் புலன்கள் ஐந்தும் - அரிய ஐந்து பொறிகளும்; தக்கது என்கொல் என்று என்று - செய்யத்தக்கது என்ன என்று எண்ணி எண்ணி; அலந்து அலையுற்ற - கலங்கித் தவித்தன. இதில் தயரதன் அடைந்த அவல மெய்ப்பாடுகள் கட்டப்படுகின்றன. கோபத்தால் கண்கள் இரத்தம்சிந்தின. புலன் - ஈண்டுப் பொறிகளைக் குறித்தது; ஆகுபெயர். ‘அலந்து அலையுற்ற’ என்பதனை ‘அலந்தலைஉற்ற’ என்று கொள்வாரும் உண்டு. அலந்தலை - ஒருசொல்; கலக்கம் என்பது பொருள். சலம் - கோபமும்ஆம். 17 1508. | மேவி நிலத்தில் இருக்கும்; நிற்கும்; வீழும்; ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும்; பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும்;- ஆவி பதைப்ப, அலக்கண் எய்துகின்றான். |
ஆவி பதைப்ப - உயிர் பதைக்கும்படி; அலக்கண் எய்துகின்றான்- பெருந்துன்பத்தை உறுகின்ற தயரதன்; நிலத்தில் மேவி இருக்கும் - தரையில்(சிறிதுபொழுது) பொருந்தி இருப்பான்; நிற்கும் - எழுந்து நிற்பான்; வீழும் - (மீண்டும்) விழுவான்; ஓவியம் ஒப்ப - சித்திரம் |