பக்கம் எண் :

122அயோத்தியா காண்டம்

தயரதன் உற்ற பெருந் துயர்  

1514.இந்த நெடுஞ் சொல் அவ் ஏழை கூறும் முன்னே,
வெந்த கொடும் புணில் வேல் நுழைந்தது ஒப்ப,
சிந்தை திரிந்து, திகைத்து, அயர்ந்து, வீழ்ந்தான்;-
மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன்.

     மைந்தன் அலாது - மகனாகிய இராமனைத் தவிர;  உயிர் வேறு
இலாத மன்னன் -
தன்னுயிர் என்று வேறு ஒன்று இல்லாத அரசனாகிய
தயரதன்;  அவ் ஏழை - அந்த அறிவற்றவளானகைகேயி;  இந்த நெடுஞ்
சொல் கூறும் முன்னே -
இந்தப் பெரிய வஞ்சினத்தைச்சொல்லிமுடிக்கு
முன்னே; வெந்த கொடும் புணில் - முன்பே தீயினால் சுட்ட கொடிய
புண்ணில்;வேல் நுழைந்தது ஒப்ப - கூரிய வேல் பாய்ந்தாற்போல;
சிந்தை திரிந்து -
மனம் தடுமாறி; திகைத்து - அறிவு மயங்கி; அயர்ந்து
வீழ்ந்தான் -
சோர்ந்துதரையில் சாய்ந்தான்.

1515.‘ஆ கொடியாய்! எனும்; ஆவி காலும்; ‘அந்தோ!
ஓ கொடிதே அறம்!’ என்னும்; ‘உண்மை ஒன்றும்
சாக!’ எனா எழும்; மெய் தளாடி வீழும் -
மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான்.

     மாகமும் நாகமும் மண்ணும் - மேலுலகத்தையும் கீழுலகத்தையும்
நிலவுலகத்தையும்; வென்ற வாளான்-வெற்றி கொண்ட வாட்படையையுடைய
தயரதன்; ஆ கொடியாய் எனும் - (கைகேயியிபைப் பார்த்து) ஐயோ,
கொடியவளே என்பான்; ஆவி காலும் - பெருமூச்சுவிடுவான்; அந்தோ ஓ
கொடிதே அறம் என்னும் -
ஐயோ! தருமம் மிகவும் கொடியதே என்பான்;
உண்மை ஒன்றும் சாக எனா - சத்தியம் என்பதொன்று சாகட்டும் என்று
சொல்லிக்கொண்டு;எழும் - எழுந்திருப்பான்; மெய் தளாடி வீழும் -
உடம்பு  நிற்க முடியாமல் தள்ளாடிவிழுவான்.

     இப்பாட்டு ஒரு சோக சித்திரம்; மன்னவன் துயரத்தைப் படம்பிடித்துக்
காட்டுகிறது.  ஆகொடியாய் - ஆ - இரக்கக் குறிப்பு. தயரதன் அறமும்
உண்மையும் நன்மைக்குத் துணை புரியாமல் இராமன்காடு புகுதலாகிய
தீமைக்கு வழி வகுத்தலின் அவற்றை இகழ்கிறான். மாகம் - துறக்கம். நாகம்-
பாதாளம்.                                                    25