1516. | ‘ “நாரியர் இல்லை இஞ் ஞாலம் எங்கும்” என்ன, கூரிய வாள்கொடு கொன்று நீக்கி, யானும், பூரியர் எண்ணிடை வீழ்வென்’ என்று, பொங்கும் - வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான். |
வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான் - பெருவீரர்கள் வீரத்தையும் வென்று தன்னுள்அடக்கி நிலைபெற்ற வேற்படையை உடைய தயரதன்; இஞ் ஞாலம் எங்கும் - இவ்வுலக முழுவதிலும்; நாரியம் இல்லை என்ன - பெண்கள் இல்லை என்னும்படி; கூரிய வாள் கொடு கொன்றுநீக்கி - கூர்மை பொருந்திய வாளால் கொலை செய்து போக்கி; யானும் பூரியர் எண்ணிடைவீழ்வென் என்று - யானும் கீழ்மக்கள் எண்ணிக்கையில் சேருவேன் என்று; பொங்கும் -சினம் மிகுவான். கைகேயியின் மேல் எழுந்த சீற்றத்தால் தயரதன் பெண்கள் கூட்டத்தையே அழித்துவிட எண்ணினான்.ஆனால், அச்செயல் தகாது என்று அடங்கினான். இதனால் அவன் சீற்ற மிகுதி வெளிப்படுகிறது. 26 1517. | கையொடு கையைப் புடைக்கும்; வாய் கடிக்கும்; ‘மெய்யுரை குற்றம்’ எனப் புழுங்கி விம்மும்; நெய் எரி உற்றென நெஞ்சு அழிந்து சோரும் - வையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன். |
வையகம் முற்றும் நடந்த - உலகம் முழுவதும் பெருவழக்காய் அறியப் பெற்ற; வாய்மை மன்னன் - சத்தியம் தவறாத தயரதன்; கையொடு கையைப் புடைக்கும் - கையுடன்மற்றொரு கையை ஓங்கி அடிப்பான்; வாய் துடிக்கும் - உதட்டைக் கடிப்பான்; மெய்உரை குற்றம் என - உண்மை சொல்லுதல் தீங்கைத் தருவது என்று சொல்லி; புழுங்கிவிம்மும்- மனம் வெந்து பொருமுவான்; நெய் எரி உற்று என - நெய்யில் நெருப்புப் பட்டாற்போல; நெஞ்சு அழிந்து - மனம் உடைந்து; சோரும் - வருந்துவான். வாய்மை மன்னனாகிய தயரதனை மெய்யுரை குற்றம் என எண்ணச் செய்தது அவனுக்கு இராமபிரான்பால்உள்ள பேரன்பு. கைபுடைத்தல் வாய்கடித்தல் ஆகியவை சினத்தால் நிகழும் மெய்ப்பாடுகள். 27 1518. | ‘ஒறுப்பினும் அந்தரம், உண்மை ஒன்றும் ஓவா மறுப்பினும் அந்தரம்’ என்று, வாய்மை மன்னன், ‘பொறுப்பினும் இந் நிலை போகிலாளை வாளால் இறுப்பினும் ஆவது இரப்பது’ என்று எழுந்தான். |
|