பக்கம் எண் :

128அயோத்தியா காண்டம்

- இந்த வரங்களை முன்னர் வாயால் தந்துவிட்டாய்;  நல்காய் - இப்போது
செயற்படுத்தமாட்டாய்; முனிவாயேல் - கோபிப்பாயானால்;  என்னே -
என்னாவது?;  வாய்மைக்கு இனி யார் உளர் - இனிமேல் வாய்மையைக்
காப்பாற்றுதற்கு யார்இருக்கின்றார்?;’ என்றாள் -.

     தன் கணவன் எவ்வளவு இரந்து வேண்டியும் இரங்காமையின் ‘தன்
நேர் இல்லாத் தீயவள்’ என்றார்.‘தீயவை யாவையினும் சிறந்த தீயாள்’ (1504)
என்று முன்னர்க் குறித்தமை கருதத்தக்கது. நல்காய்என்பதனை
முற்றெச்சமாக்கிச் செயற்படுத்தாமல் என்றும் பொருள் கொள்ளலாம்.
‘மன்னா? யார்உளர் வாய்மைக்கு இனி’  என்பது  இகழ்ச்சிக் குறிப்பு.    34

1525.அச் சொல் கேளா, ஆவி புழுங்கா,
     அயர்கிண்றான்,
பொய்ச் சொல் பேணா வாய்மொழி மன்னன்,
     பொறை கூர,
‘நச்சுத் தீயே பெண் உரு அன்றோ?’
     என, நாணா,
முச்சு அற்றார்போல், பின்னும் இரந்தே
     மொழிகின்றான்;

     பொய்ச் சொல் பேணா - பொய்யான சொற்களைப் போற்றாத;
வாய்மொழி மன்னன்- உண்மை மொழிகளைப் போற்றும் தயரதன்; அச்
சொல் கேளா -
அந்தச் சொற்களைக்கேட்டு; ஆவி புழுங்கா - உயிர்
வெதும்பி;  அயர்கின்றான் - சோர்ந்து;  பொறை கூர - முன்னிலும்
பொறுமை மேலிட;  நச்சுத் தீயே பெண் உரு அன்றோ’ என -
‘(கொல்லும் தன்மையுள்ள) நஞ்சும், தீயுமே இப்பெண்ணின் தோற்றமாக
வந்துள்ளனவன்றோ’ என்றுஎண்ணி; நாணா- வெட்கமுற்று; முச்சு அற்றார்
போல் -
மூச்சு அடங்கியவரைப்போல இருந்து; பின்னும் இரந்தே
மொழிகின்றான் -
மேலும் இரத்தலை மேற்கொண்டேபேசுகின்றான்.

     இது, கைகேயியின் இகழ்ச்சிக் சொல் கேட்ட தயரதன் உற்ற
சோகத்தையும் தொடர்ந்து வேறுவழியின்றி அவனிடம் இரந்து நிற்றலையும்
கூறுகிறது. பேணா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.கேளா,  நாணா -
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள். கூர்- உள்ளது சிறத்தலாகிய
குறிப்புணர்த்தும் உரிச்சொல். மூச்சு - மூச்சு என்பதன் குறுக்கல் விகாரம். 35

1526.‘நின் மகன் ஆள்வான்; நீ, இனிது ஆள்வாய்;
     நிலம் எல்லாம்.
உன் வயம் ஆமே; ஆளுதி; தந்தேன்;
     உரை குன்றேன்;