கைகேயி ‘வரத்தைத் தவிருமாறு கூறுதல் அறமோ?’ எனல் 1528. | இரந்தான் சொல்லும் இன் உரை கொள்ளான். முனிவு எஞ்சாள், மரம்தான் என்னும் நெஞ்சினள், நாணாள், வசை பாராள், ‘சரம் தாழ் வில்லாய்! தந்த வரத்தைத் “தவிர்க்” என்றல், உரம்தான் அல்லால், நல் அறம் ஆமோ? உரை’ என்றாள். |
இரந்தான் சொல்லும் இன் உரை கொள்ளாள் - தயரதன் தன் பால் குறையிரந்துசொல்லும் இனிய சொற்களைக் கேளாதவளும்; முனிவு எஞ்சாள் - கோபம் தணியாதவளும்; மரம்தான் என்னும் நெஞ்சினள் - மரம் என்று சொல்லத்தக்க வன்மையான மனத்தைக் கொண்டவளும்; நாணாள் - வெட்கம் இல்லாதவளும்; வசை பாராள் - பழியைப் பற்றிக் கவலைப்படாதவளுமானகைகேயி; ‘சரம் தாழ் வில்லாய் - (தயரதனைத் பார்த்து) ‘அம்புகள் தங்கும் வலியவில்லையுடையே அரசே!; தந்த வரத்தைத் ‘தவிர்க’ என்றல் - முன்பு கொடுத்த வரத்தை விட்டுவிடு என்று வேண்டுவது; உரம்தான் அல்லால் - மன வலிமையேயன்றி; நல் அறம் ஆமோ உரை -நல்ல தருமம் ஆகுமோ சொல்லாய்;’ என்றாள்-. கைகேயியின் வலிய நெஞ்சுக்கு மரத்தை உவமையாகச் சொன்னார் - திருத்தற்கு அரிதாதலின்.இரும்பாயின் நெருப்புக்கு இளகும்; மரமோ சாம்பலாகுமோ தவிரநெகிழாது. கைகேயி நெகிழாமல் நின்றமை உணர்த்தப்பட்டது கொள்ளாள், நெஞ்சினள், நாணாள், பாராள் - வினையாலணையும் பெயர்கள். 38 மண்ணில் விழுந்து, மன்னன் புலம்புதல் 1529. | கொடியாள் இன்ன கூறினள்; கூற, குல வேந்தன், ‘முடி சூடாமல் வெம்பரல் மொய் கானிடை, மெய்யே நெடியான் நீங்க, நீங்கும் என் ஆவி இனி’ என்னா, இடி ஏறுண்ட மால் வரைபோல், மண்ணிடை வீழ்ந்தான். | கொடியாள் - கொடியவளான கைகேயி; இன்ன கூறினள் - இப்படிப்பட்டவற்றைச்சொன்னாள்; கூற - சொல்ல; குல வேந்தன் |