- சிறந்த மன்னர் மன்னனாகிய தயரதன்; இனி - இனிமேல்; நெடியான் - இராமன்;முடிசூடாமல் - மகுடம் சூட்டிக்கொள்ளாமல்; வெம்பரல் மொய் கானிடை நீங்க - கொடிய பருக்கைக் கற்கள் நிறைந்த காட்டில் உறையச்செல்ல; மெய்யே என் ஆவி நீங்கும் என்ன- உண்மையாக என் உயிர் பிரியும் என்றும் சொல்லி; இடி ஏறுண்ட மால்வரை போல - இடியினை ஏற்ற பெரிய மலையைப்போல; மண்ணிடை - பூமியில்; வீழ்ந்தான் -சாய்ந்தான். திருமாலாதலின் இராமன் நெடியோன் என்று குறிக்கப்பெற்றான். ஏறுண்ட - தாக்கப்பட்ட; ‘இடிஏறு உண்ட’ எனப் பிரித்தும் ‘பேரிடி வீழ்ந்த’ எனப் பொருள் உரைப்பாரும் உண்டு. ‘காத்தலும்’என்ற பாடத்தினும் ‘வெம்பரல்’ என்று பாடமே சரி. 39 1530. | வீழ்ந்தான்; வீழா, வெந் துயரத்தின் கடல் வெள்ளத்து ஆழ்ந்தான்; ஆழா, அக் கடலுக்கு ஓர் கரை காணான்; சூழ்ந்தாள் துன்பம் சொற் கொடியாள், சொல்கொடு நெஞ்சம் போழ்ந்தாள், உள்ளப் புன்மையை நோக்கிப் புலர்கின்றான். |
வீழ்ந்தான் - (தயரதன்) மண்ணில் விழுந்தான்; வீழா - விழுந்து; வெம் துயரத்தின் கடல் வெள்ளத்து - கொடிய துயரமாகிய கடலின் வெள்ளத்தில்; ஆழ்ந்தான்- அமுந்தினான்; ஆழா - அழுந்தி; அக்கடலுக்கு ஓர் கரை காணான் - அந்தக்கடலுக்கு ஒர் எல்லை காணாதவன் ஆனான்; துன்பம் சூழ்ந்தாள் - தனக்குப் பெருந்துன்பத்தைச் சூழ்ந்துகொண்டவளும்; சொல் கொடியாள் - கொடிய சொற்களையுடையவளும்; சொல்கொடுநெஞ்சம் போழ்ந்தாள் - தன் பேச்சால் மனத்தைப் பிளந்தவளுமான கைகேயியின்; உள்ளன்புன்மையை நோக்கிப் - மனத்தின் சிறுமையை எண்ணி; புலர்கின்றான் - வாடுகின்றான். துயரத்தைக் கடலாக உருவகித்ததற்கு ஏற்பக் ‘கரை காணான்’ என்றார். வீழ்ந்தான் - வினைமுற்று.சூழ்ந்தாள், கொடியாள், போழ்ந்தாள் - வினையாலணையும் பெயர்கள். 40 1531. | ‘ “ஒன்றாநின்ற ஆர் உயிரோடும், உயர் கேள்வர் பொன்றா முன்னம் பொன்றினர்” என்னும் புகழ் அல்லால், இன்று ஓர்காறும், எல் வளையார், தம் இறையோரைச் |
|