வங்கியம் பல - இசைக் குழல்கள் பலவும்; தேன் விளம்பின - தேன்போலும் இனிய இசையை ஒலித்தன; வாணி முந்தின பாணியின் பங்கி - சொற்கள் முற்பட்ட இசைப்பாட்டின் வகைகள்; அம்பரம் எங்கும் விம்மின - வானம் எங்கும் நிறைந்தன; பம்பை பம்பின - பம்பை என்னும் வாத்தியங்கள் பேரொலி செய்தன; பல்வகை -பலவகையான; பொங்கு இயல் பலவும் - மகளிரின் காற்சிலம்புகள் ஒலிக்க; வெண்சங்குஇயம்பின- வெள்ளிய வளையல்கள் அவற்றிற்கேற்ப ஒலித்தன; கொம்பு அலம்பின - ஊது கொம்புகள் ஒலித்தன; சாமகீதம் நிரந்த - சாமவேத இசை நிரம்பின. அயோத்தி நகரில் காலையில் எழுந்த பல்வேறு ஒலிகள் குறிக்கப்பட்டன. கொட்டுவன, தட்டுவன, ஊதுவன முதலிய வாத்தியங்கள் பலவகை. நூபுரங்கள் புலம்ப என்பதற்கு மகளிர் காற்சிலம்பு என்றுபொருள் கொண்டதற்கு ஏற்பச் ‘சங்கு இயம்பின’ என்பதற்கு வளையல்கள் ஒலித்தன என்றுபொருள்கொள்ளப்பட்டது. சங்கு - சங்கினால் ஆகிய வளையல். ஏ - ஈற்றசை. 64 கதிரவன் தோற்றம் 1555. | தூபம் முற்றிய கார் இருட் பகை துள்ளி ஒடிட, உள் எழும் தீபம் முற்றவும் நீத்து அகன்றென சேயது ஆர் உயிர் தேய, வெம் பாபம் முற்றிய பேதை செய்த பகைத் திறத்தினில், வெய்யவன் கோபம் முற்றி மிகச் சிவந்தனன் ஒத்தனன், குண குன்றிலே. |
தூபம் முற்றிய - புகைபோல எங்கும் சூழ்ந்த; கார் இருள் பகை துள்ளி ஓடிட-கரிய இருளாகிய பகை குதித்து ஓடிப்போகவும்; உள் எழும் தீபம் முற்றவும்- வீடுகளின்உள்ளே எரிகின்ற விளக்குகள் எல்லாம்; நீத்து அகன்றென - ஒளியைத் துறந்து மழுங்கியபோல; சேயது ஆர் உயிர் தேய - தன் குலத்தில் பிறந்த தயரதனது அரிய உயிர் மெலியும்படி; வெம் பாபம் முற்றிய பேதை செய்த - தீவினை முதிர்ந்த கைகேயி புரிந்த; பகைத் திறத்தினில்- பகைச் செயலால்; வெய்யவன் - சூரியன்; குண குன்றின் - கிழக்கு மலையில்; கோபம் முற்றி மிகச் சிவந்தனன் ஒத்தனன் - சினம் முதிர்ந்து மிகவும் செந்நிறம்கொண்டவன் போலக் காணப்பட்டான். சூரியன் கிழக்கு மலையில் சிவந்து தோன்றியதனைத் தன் குலத்தில் பிறந்த தயரதனது உயிர்ஒடுங்குமாறு கேடு சூழ்ந்த கைகேயியின்மீது கோபம் கொண்டவன் போலத் தோன்றினான் என்றது ஏதுத்தற்குறிப்பேற்ற அணி. குண குன்று - கதிரவன் எழும் கிழக்கு மலை. குணக்கு - கிழக்கு 65 |