பக்கம் எண் :

152அயோத்தியா காண்டம்

     அவ் ஊர் - அந்த அயோத்தி நகரத்தில் வாழும்;  கற்பின் மிக்கார்
மாதர்கள் - 
கற்பிற் சிறந்த முதிய மகளிர்கள்;  கோசலை மனத்தை
ஒத்தார்
-இராமனுடையதாய் கோசலையின் மனம் போன்ற மனம்
உடையவர் ஆயினர்;  வேறு உள மகளிர்எல்லாம் - மற்ற இளம்
பெண்கள் எல்லாம்; சீதையை ஒத்தார் - மகிழ்ச்சியில்சீதையைப்
போன்றவர் ஆயினர்;  அன்னாள் திருவினை ஒத்தாள் - அந்தச் சீதை
இலக்குமியை ஒத்தவள்ஆயினாள்;  வேதியர்  வசிட்டன் ஒத்தார் -
மறையவர்கள் வசிட்டமுனிவரைப் போன்றவர் ஆயினர்; சாதுகை மாந்தர்
எல்லாம் -
சாதுக்களான முதிய ஆடவர்எல்லாரும்;  தயரதன் தன்னை
ஒத்தார் -
தயரத மன்னனைப் போன்றவர் ஆயினர்.

     நகர மக்கள் அவரவர்  தகுதிக்கேற்ப அடைந்த மகிழ்ச்சிபொருந்திய
மனநிலை அழகுற எடுத்துக் காட்டப்படுகிறது.  இராமன் முடுசூடுவது அரசத்
திருவைமனத்தலாதலால் அத்திருமகள் மகிழ்வதுபோலச் சீதை மகிழ்ந்தாள்
என்றார்.                                                    70

அரசர்கள் வருதல்  

1561.இமிழ் திரைப் பரவை ஞாலம்
     எங்கணும் வறுமை கூர,
உமிழ்வது ஒத்து உதவு காதல்
     உந்திட, வந்தது அன்றே -
குமிழ் முலைச் சீதை கொண்கன்
     கோமுடி புனைதல் காண்பான்,
அமிழ்து உணக் குழுழுகின்ற அமரரின்.
     அரச வெள்ளம்.

     அரச வெள்ளம் - அரசர்களின் பெருந்திரள்; குமிழ் முலைச் சீதை
கொண்கன் -
குவிந்த நகில்களையுடைய சீதைக்குக் கணவனாகிய
இராமபிரான்;  கோமுடி புனைதல் காண்பான்- அரசுக்குரிய மகுடம்
சூட்டிக்கொள்ளுவதைக் காண்பதற்கு;  உமிழ்வது  ஒத்து  உதவுகாதல்
உந்திட
- (உள்ளே நிறைந்து) புறம்பே வெளிப்படுவது  போன்று மிகுகின்ற
விருப்பம்தம்மைத்தூண்ட;  அமிழ்து  உணக் குழுமுகின்ற அமரரின் -
அமுதத்தை உண்பதற்கு ஆவலோடுதிரண்ட தேவர்களைப் போல;
இமிழ்திரைப் பரவை ஞாலம் - ஒலிக்கும் அலைகளையுடையகடலால்
சூழப்பட்ட உலகம்;   எங்கணும்  வறுமை  கூர - எல்லா இடத்தும்
வெறுமையடையும்படி;வந்தது - வந்து கூடிற்று;

     அரசர் கூட்டத்திற்குத் தேவர் கூட்டத்தை  உவமை கூறினார்.
உவமை அணி.  பரவை - பரவிஇருப்பது;  ஐ - வினைமுதல் விகுதி.
அன்று,  ஏ - அசைகள்.                                       71