பக்கம் எண் :

கைகேயி சூழ்வினைப் படலம் 167

உடையம் - எந்த மறு உதவி உடையராய் இருக்கின்றோம்?;  என்பார் -
என்று கூறுவர் சிலர்.

     இராமன் கண்ணழகிலும் மேனியழகிலும் ஈடுபட்டு அவற்றிற்கு
உவமையாகும் தகுதிபெற்ற தாமரையையும்,  மேகத்தையும்  புகழ்ந்தனர்
சிலர், இராமனைப் பெற்றுத் தந்த தயரதன் தந்தகொடைக்கு ஈடாக எந்தக்
கைம்மாறும்  நம்மால் செய்ய இயலாது  நன்றியால் நிறைந்தனர் சிலர்.
புயல் - நீருக்கு இலக்கணை.                                     93

1584.‘வாரணம் அரற்ற வந்து,
     கரா உயிர் மாற்றும் நேமி
நாரணன் ஒக்கும், இந்த
     நம்பிதன் கருணை’ என்பார்;
ஆரணம் அறிதல் தேற்றா
     ஐயனை அணுகி நோக்கி,
காரணம் இன்றியேயும்,
     கண்கள் நீர் கலுழ நிற்பார்.

     இந்த நம்பிதன் கருணை - இந்தக் குணங்களால் நிறைந்தவனாகிய
இராமபிரானதுதிருவருள்; வாரணம் அரற்ற வந்து - முதலை வாய்ப்பட்ட
கயேந்திரன் என்னும்  யானைஆதிமூலமே  என்று கதற அங்குத் தோன்றி;
கரா உயிர் மாற்றும் - முதலையின் உயிரைப்போக்கிய;  நேமி நாரணன்
(கருணை) ஒக்கும் - சக்கரப் படையையுடைய திருமாலின்திருவருளை
ஒத்ததாகும்; என்பார்- என்று கூறுவர் சிலர்; ஆரணம் அறிதல் தேற்றா-
மறைகளும் இனையன் என்று அறிய இயலாத;  ஐயனை அணுகி நோக்கி-
(திருமாலாகிய)இராமபிரானை நெருங்கி நன்கு பார்த்து; காரணம்
இன்றியேயும் -
(அன்பு தவிர வேறு) காரணம் இல்லாமலே; கண்கள் நீர்
கலுழ நிற்பார் -
கண்களிலிருந்து நீர் சொரியநிற்பார் சிலர்.

     நாரணன் - நாராயணன் என்பதன் சிதைவு.  நாரணன் என்பதன்
பின்னும் கருணை என்பதனைப்பிரித்துக் கூட்டுக. காரணமின்றிக் கண்ணீர்
சொரிந்தனர் என்பது அவர்களது  பரவசநிலையினைக்காட்டும்.        94

1585.‘நீல மா முகில் அனான்தன்
     நினையினோடு அறிவும் நிற்க.
சீலம் ஆர்க்கு உண்டு? கெட்டேன்?
     தேவரின் அடங்குவானோ?
காலமாக் கணிக்கும் நுண்மைக்
     கணக்கையும் கடந்து நின்ற
மூலம் ஆய், முடிவு இலாத
     மூர்த்தி இம் முன்பன்’ என்பார்.