ஆர்கலி அகழ்ந்தவர் சகரர்; கங்கை தந்தோன் - பகீரதன்; அசுரரை வென்றோர் -ககுத்தன், முசுகுந்தன் முதலியோர். ஐயன் திரள் தோற்களுக்குத் தாடகைவதம், சிவனது வில்லைமுறித்தது, பரசுராமனை அடக்கியது. ஆகியவற்றால் புகழ் உண்டாயிற்று. புலவர் -அறிவினையுடைய தேவர்கள். அசுரர் - சுரர்க்குப் பகைவர். சுரர் - தேவர்; அமுதத்தை (சுராவை)உண்டவர். 96 பலர் செயல் கலிவிருத்தம் 1587. | ‘சந்தம் இவை; தா இல்மணி ஆரம் இவை; யாவும் சிந்துரமும் இங்கு இவை; செறிந்த மத வேழப் பந்திகள், வயப் பரி, பசும் பொனின் வெறுக்கை, மைந்த! வறியோர் கொள வழக்கு’ என நிரைப்பார். |
மைந்த - வீரனே!; இவை சத்தம் - இவை சந்தனக் கலவைகள்; இவை தாஇல் மணி ஆரம் - இவை குற்றமில்லாத இரத்தின மாலைகள்; இங்கு இவை -இவ்விடத்திலுள்ள இவை; சிந்துரமும் - திலகமும்; யாவும்- மற்றை எல்லாஅணிகளும் ஆகும்; செறிந்த மதவேழப் பந்திகள் - பொருந்திய மதயானை வரிசைகள்; வயப் பரி - வெற்றியையுடைய குதிரைகள்; பசும் பொனின் வெறுக்கை - பசும்பொன்னாலாகிய செல்வங்கள்; வறியோர் கொள - (இவற்றையெல்லாம்) பொருளில்லாத ஏழைகள் பெற்றுக்கொள்ளும்படி; வழக்கு - (உன்கையால்) எடுத்துக் கொடு; எனநிரைப்பார் - என்று வரிசையாகக் கொண்டுவந்து வைப்பவர் சிலர். இராமனுக்கு முடிசூட்டுவிழா நிகழும் காலத்தில் அவனுக்கு நன்மை விளைய வேண்டும் என்று கருதிய சிலர் தம்முடைய பொருளான சந்தனம் முதலியவற்றை அவன் கையில்கொடுத்து வறியவர்களுக்கு வழங்க வேண்டும் என்று வேண்டினர். வழங்குதல் - வரம்பு இல்லாமல் கொடுத்தல். 97 1588. | மின் பொருவு தேரின்மிசை வீரன் வரு போழ்தில், தன் பொருவு இல் கன்று தனி தாவி வரல் கண்டாங்கு அன்பு உருகு சிந்தையொடும் ஆ உருகுமாபோல், என்பு உருகி, நெஞ்சு உருகி, யார் உருககில்லார்? |
|