பக்கம் எண் :

மந்திரப் படலம் 17

தினைச் செய்யாது) ;  குழைத்தது ஓர் அமுதுடைக் கோரம் நீக்கி-
இனியவற்றைக் கூட்டிச் சேர்த்த அமுதத்தைக் கொண்ட வட்டிலை ஒதுக்கி ;
வேறுஅழைத்த தீ விடத்தினை - அதற்கு மாறாகச் சொல்லப் பட்ட
கொடிய நஞ்சினை ;  அருந்தல் ஆகுமோ - நுகர்தல் தகுமோ? (தகாது)’

     அமுத வட்டிலை ஒதுக்கிவிட்டுத் தீவிடத்தினை நுகர்தல் தகாதது
போலத்தவத்தினை விடுத்து அரச வாழ்வில் மூழ்கியிருத்தல் தகாது என்பது
கருத்து. ‘தவத்தினைச்செய்யாமல் அரசவாழ்வை மேற்கொண்டிருத்தல்’
என்னும் பொருளினைச் சொல்லாமல் உவமையை மட்டும்கூறியதனால் இது
ஒட்டணி ஆகும். கோரம் - வட்டில்.                              24

1338. ‘கச்சை அம் கடக் கரிக் கழுத்தின்கண் உறப்
பிச்சமும் கவிகையும் பெய்யும் இன் நிழல்
நிச்சயம் அன்றுஎனின், நெடிது நாள் உண்ட
எச்சிலை நுகருவது இன்பம் ஆகுமோ?

     கச்சை அம் கடக்கரி - கயிறு பூண்ட அழகிய மத யானையினது ;
கழுத்தின்கண் உற - கழுத்தில் பொருந்த ;  பிச்சமும் கவிகையும்
பெய்யும்
- பீலிக் குஞ்சமும் வெண் கொற்றக் குடையும் தருகின்ற ;  இன்
நிழல்
- இனியநிழலின்கண் இருந்து ஆளும் வாழ்வு ;  நிச்சயம் அன்று
எனின் - என்றும் நிலைக்கக்கூடியதன்று என்றால் ; நெடிது நாள் உண்ட
எச்சிலை
- நெடுங்காலமாக நுகர்ந்துவந்தஎச்சில் போன்ற அதனை ;
நுகருவது - மேலும் துய்ப்பது ;  இன்பம் ஆகுமோ- இன்பம்
தருவதாகுமோ? (ஆகாது).’

     நிலையாத அரச இன்பத்தை விடுத்து நிலைத்த இன்பம் நல்கும்
துறவினைநாடுவது சிறப்பு என்பது கருத்து.

“ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ”
                              (திருவாய்மொழி, 4:1:1)

என்பர் நம்மாழ்வார்.

     பிச்சமும் கவிகையும் அரச சின்னங்கள். நிழல் - ஈண்டுக் குடைநிழலில்
இருந்து ஆளும் அரச போகத்தைக் குறித்தது.                       25

1339. ‘மைந்தரை இன்மையின் வரம்பு இல் காலமும்
நொந்தனென் ; இராமன் என் நோவை நீக்குவான்
வந்தனன் ; இனி, அவன் வருந்த, யான் பிழைத்து,
உய்ந்தனென் போவது ஓர் உறுதி எண்ணினேன்.