பக்கம் எண் :

கைகேயி சூழ்வினைப் படலம் 175

தேறா -முதலில் மனம் சோர்ந்து பின்னர்த் தெளிவுற்று; தூயவன் இருந்த
சூழல் -
நல்லவனானதயரதன் இருந்த இடத்தை;  துருவினன் வருதல்
நோக்கி -
தேடி வருவதைப் பார்த்து;  நாயகன் வாயால் உரையான் -
கணவன் தன் வாயால் சொல்ல மாட்டான்; நான் இதுபகர்வேன் என்னா-
நானே இதனைச் சொல்லுவேன்’ என்று எண்ணிக் கொண்டு; தாய் என
நினைவான் முன்னே -
தன்னைத் தாய் என்று கருதும் இராமபிரான்
முன்னே;  கூற்று என -எமன் போல; தமியள் வந்தாள் - நிகரற்ற
கொடுமைக்காரியான கைகேயி வந்தாள்.

     அன்பு பொழியும் தாய் என்று கருதுபவன் முன்னே துன்பு தரும்
எமன் போல வந்தாள் என்க.‘வாயால்’ என்று வேண்டாது கூறினார்.
இராமனுக்கு நன்மை  பயப்பனவற்றையே சொல்லிப் பழகியவாய் என்று
அறிவித்தற்கு. இது என்றது. அவள் பெற்ற இருவரங்களைத் தெரிவித்தலைச்
சுட்டியது.                                                   107

இராமபிரான் கைகேயியை வணங்குதல்  

1598.வந்தவள் தன்னைச் சென்னி
     மண் உற வணங்கி, வாசச்
சிந்துரப் பவளச் செவ்வாய்
     செங்கையின் புதைத்து, மற்றைச்
சுந்தரத் தடக் கை தானை
     மடக்குறத் துவண்டு நின்றான்-
அந்தி வந்து அடைந்த தாயைக்
     கண்ட ஆன் கன்றின் அன்னான்.

     அந்தி வந்து அடைந்த - மாலைப்பொழுதில் வந்து சேர்ந்த;
தாயைக் கண்ட ஆன்கன்று அன்னான்-
தாய்ப்பசுவைக் கண்ட பசுவின்
கன்றைப் போன்ற இராபிரான்;  வந்தவள் தன்னை - தன் முன்னே வந்த
அக்கைகேயியை;  சென்னி மண் உற வணங்கி -நெற்றி தரையில்
பொருந்த விழுந்து வணங்கி; வாசச் சிந்துரப் பவளச் செவ்வாய்-மணம்
வீசுவதும் சிந்தூரத்தையும் பவளத்தையும் போன்ற  சிவந்த வாயை; செங்
கையின்புதைத்து -
சிவந்த (வலக்) கையால் பொத்திக்கொண்டு; மற்றைச்
சுந்தரத் தடக் கை -
மற்றொன்றாகிய அழகுபொருந்திய பெரிய இடக்
கையானது;  தானை மடக்குற - ஆடையைமடக்கிக்கொள்ள; துவண்டு
நின்றான் -
வணங்கி நின்றான்.

     இப்பாட்டு இராமபிரானுடைய அடக்கத்தைக் காட்டுகிறது.  அடக்கம்
என்பது உயர்ந்தோர்முன்பணிந்த மொழியும்,  தணிந்த நடையும்,  தாளை
மடக்கலும், வாய் புதைத்தலும், தலைதாழ்த்திநிற்றலும் கொண்டு
அடங்கியொழுகுதலாம். இராமபிரான் அடக்கத்திற்கு விளக்கம் தருவதுபோல
நிற்றல் போற்றி மகிழத்தக்கது. சென்னி ஈண்டு இலக்கணையாய நெற்றியைக்
குறித்தது.  இன உருபுபொருளில்  வந்தது.                        108