1341. | ‘பெருமகன் என்வயின் பிறக்க, சீதை ஆம் திருமகள் மணவினை தெரியக் கண்ட யான், அரு மகன் நிறை குணத்து அவனி மாது எனும் ஒருமகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன். |
‘பெருமகன் என்வயின் பிறக்க - ஆடவர் திலகமாகிய இராமன் எனக்குமகனாகத் தோன்ற ; சீதை ஆம் திருமகள் மணவினை - சீதையாகிய திருமகளின்திருமணத்தை ; தெரியக் கண்ட யான் - கண்ணாரப் பார்த்து மகிழ்ந்த யான்; அரு மகன் - அந்த அரிய மகனாகிய இராமன் ; நிறை குணத்து அவனி மாது எனும் - நிறைந்த குணத்தையுடைய மண்மகள் என்கிற ; ஒரு மகள் மணமும் - ஒப்பற்ற பெண்ணை மணம்புரிந்து கொள்ளுதலையும் ; கண்டு உவப்ப உன்னினேன் - கண்ணாரக்கண்டு களிக்கக் கருதினேன்.’ தயரதன், “இராமனுக்குத் திருமணம் நடந்ததைக் கண்டு மகிழ்ந்த யான்,அரசுரிமை ஏற்றலையும் செய்விக்கப் பேரவாக் கொள்கிறேன்” என்கிறான். பெருமகன், திருமகள்,அவனிமாது ஆகிய சொற்கள், “பெருமாளுக்குத் தேவியர் இருவருள் திருமகள் கூடியதைக் கண்டு களித்தேன் ; இனி மண்மகள் கூடுவதனையும் காண விழைகிறேன்” என்னும் பொருளினைத்தெரிவிப்பனவாக அமைந்துள்ளன. இதுவரை தயரதன் தான் துறக்க விரும்பியதற்குக் காரணங் கூறி, இது முதல்இராமனுக்கு அவன் முடிசூட்ட விரும்பியதைக் கூறுகிறான். 28 1342. | ‘நிவப்புறு நிலன் எனும் நிரம்பு நங்கையும், சிவப்புறு மலர்மிசைச் சிறந்த செல்வியும், உவப்புறு கணவனை உயிரின் எய்திய தவப் பயன் தாழ்ப்பது தருமம் அன்றுஅரோ. |
‘நிவப்புறு - உயர்வு பெற்ற ; நிலன் எனும் நிரம்புநங்கையும் - மண் என்னும் பெண்மைக் குணங்கள் நிரம்பிய தேவியும் ; சிவப்புறு மலர்மிசைச் சிறந்த செல்வியும் - செந்நிறத் தாமரை மலரின்மீது வீற்றிருக்கின்றசீதேவியும் ; உவப்புறு கணவனை - விரும்பத்தக்க மணாளனை ; உயிரின்எய்திய - தம் உயிர்போல அடைவதற்குக் காரணமான ; தவப் பயன் -தவத்தின் பயனை ; தாழ்ப்பது தருமம் அன்று - பிற்படச் செய்வது அறம் ஆகாது.’ நிவப்புறு என்பதனை நங்கையொடும் செல்வியொடும் தனித்தனிக் கூட்டுக.நிலமடந்தைக்கு உயர்வாவது - எல்லாப் பொருள்களையும் தாங்கும் ஆற்றலுடைமை, வளம்முதலியவற்றால் சிறந்திருத்தல். திருமகளுக்கு உயர்வாவது - யாவர்க்கும் செல்வப் பெருக்கைத்தந்து இம்மை மறுமை இன்பங்களை நுகரச் செய்தல். அரோ - ஈற்றசை. முன் பாட்டின் கருத்தையே மறுமுறையும் வற்புறுத்தி இராமனுக்கு முடிசூட்டும்நாளைத் தள்ளிப் போடுவது அறம் ஆகாது என்றும் ஆதலின் விரைந்து முடிசூட்டல் வேண்டும் என்றுகூறுகிறான். |