பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 191

வனம்போதல்’ என்ற இரண்டையும் கோசலை ஏற்றுக்கொள்ளச் செய்வதில் இராமன் வெற்றிஅடைந்தான் என்பது  இதனால் போதரும்.            18

கோசலை  வேண்டுகோளை இராமன் மறுத்துரைத்தல்  

1624.‘என்னை நீங்கி இடர்க் கடல் வைகுறும்
மன்னர் மன்னனை வற்புறுத்தாது, உடன்
துன்னு கானம் தொடரத் துணிவதோ?
அன்னையே! அறம் பார்க்கிலை ஆம்’ என்றான்.

     ‘அன்னையே! - தாயே;  என்னை நீங்கி - என்னைப் பிரிந்து;
இடர்க்கடல்  வைகுறும் - துன்பக்கடலில் தங்கியுள்ள;  மன்னர்
மன்னனை
-சக்கரவர்த்தியை; வற்புறுத்தாது - மன உறுதி செய்து
தைரியப்படுத்தாமல்;  உடன் -என்னோடு;  துன்னு கானம் - நெருங்கிய
காட்டிற்கு; தொடர - பின்பற்றிவர;  துணிவதோ? - மனத்தில் நிச்சயிப்பது
தகுமோ;  அறம் பார்க்கிலை ஆம்! - மனைவிக்குள்ள தருமத்தை
ஆராய்ந்து  கருதவில்லை போலும்;’  என்றான் -.

     மனைவியின் தர்மம் கணவனைக் காத்தல். ‘தற்காத்துத் தற்கொண்டான்
பேணித் தகைசான்ற,சொற்காத்துச் சோர்விலாள் பெண்’ என்றார்
வள்ளுவரும். (குறள். 56) இந்தப் பத்தினிதர்மத்தை இராமன் தன் தாய்க்கு
நினைவு படுத்தினான்.                                           19

1625.‘வரி வில் எம்பி இம் மண் அரசு ஆய், அவற்கு
உரிமை மா நிலம் உற்றபின், கொற்றவன்
திருவின் நீங்கித் தவம் செயும் நாள், உடன்,
அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே!

     ‘வரிவில் எம்பி - கட்டமைந்த வில்லினை உடைய என்தம்பி பரதன்;
இம் மண்அரசு ஆய் -
இந்தக் கோசல நாட்டுக்கு அரசன் ஆகி; 
அவற்கு - அந்தப் பரதனுக்கு;  மாநிலம் உரிமை உற்றபின் - பெரிய
இராச்சியத்தின் உரிமை நிலைப்பட்ட பிறகு;  கொற்றவன் - தயரதன்;
திருவின் நீங்கி - அரச போக வாழ்க்கையிலிருந்துவிலகி;  தவம்
செய்யும் நாள் -
தவம் செய்கின்ற காலத்தே;  உடன் - அவனோடு
சேர்ந்து;  அருமை நோன்புகள் - செயற்கரிய விரதங்களை; ஆற்றுதி
ஆம் -
செய்வாயாக.’

     வரத்தால் அரசன் ஆயினும்,  மக்கள் அவன் வழிப்படவும் அவன்
ஆட்சி உறுதி பெறவும்சிலகாலம் செல்லுமாகலின், ‘மாநிலம் உரிமை
உற்றபின்’ என்றான் இராமன். வானப்பிரந்தநிலையில் மனைவியை
உடன்கொண்டு தவம் செய்தல் உண்டாதலின் உடன்சென்று அரிய
விரதங்களைச்செய்க என்றானாம். ‘அன்று’ , ‘ஏ’ அசைகள்.            20