பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 193

     ‘மாதவர்க்கு வழிபாடு இயற்றி - சிறந்த முனிவர்களுக்குப் பணி
விடைகளைச் செய்து;அரும்  போதம் முற்றி - (அவரால்) பெறுதற்கு
அரிய ஞானம் நிரம்பப் பெற்று;  பொருஅரு விஞ்சைகள் - ஒப்பற்ற
வித்தைகள்; ஏதம் அற்றன - குற்றம் இல்லாதனவற்றை; தாங்கி - பெற்று;
இமையவர் காதல் பெற்று - தேவர்களின் அன்பை அடைந்து; இந்நகர்
வரக் காண்டி-
(யான்) இந்நகரத்துக்குத் திரும்பி வருதலைப் பார்ப்பாயாக.’

     போதம் என்பது வீடுபேற்றிற்குரியதாகிய பரமஞானம். பின்னர்
அகத்தியர் முதலியமுனிவர்களால் இவ் அரும் போதம்  இராமனுக்குக்
கிடைக்கிறது. இராமவணாதி வதத்தால்தேவர்களின் அன்பையும் இராமன்
பெறுகிறான் என்பது இங்கே குறிப்பிற் புலப்படும். ‘ஆல்’ஈற்றசை. தேற்றம்
என்பதும் பொருந்தும்.                                          23

1629.‘மகர வேலை மண் தொட்ட, வண்டு ஆடு தார்ச்
சகரர் தாதை பணி தலைநின்று, தம்
புகர் இல் யாக்கையின் இன் உயிர் போக்கிய
நிகர் இல் மாப் புகழ் நின்றது அன்றோ?’ எனா.

     ‘மகர வேலை மண் தொட்ட - சுறாமீன்களை உடைய கடலாற்
சூழப்பெற்ற இப்பூமியைத்தோண்டிய; வண்டு ஆடு தார்ச் சகரர் -
வண்டுகள் தேனுண்டு ஆடுகின்ற மாலை அணிந்த சகரபுத்திரர்கள்; தாதை
பணிதலை நின்று -
தம் தந்தை சொல்லைத் தம் தலைமீது  கொண்டு
சென்று;  தம் புகர் இல் யாக்கையின் இன் உயிர் போக்கிய - தமது
குற்றமற்றஉடம்பின்கண் உள்ள இனிய உயிரை இழந்ததனால் உண்டாகிய;
நிகர் இல் மார்புகழ் -சமானம் இல்லாத பெரும்புகழ்;  நின்றது
அன்றோ -
இவ் வுலகத்தில் இன்றும் நிலைபெற்றுள்ளது  அல்லவா;’
எனா - என்று சொல்லி.

     ஒருவேளை தந்தையினது கட்டளையை மேற்கொண்டு வனம் சென்று
உயிர் போமாயினும் அதுவும்பெரும்புகழையே தனக்குத் தரும் என்றான்.
சகரர் தந்தை கட்டளைப்படி வேள்விக் குதிரையை நாடிச்சென்று
அதனாலேயே சாம்பலானார்கள். ஆயினம், அதுவே அவர்களுக்குப் பெரும்
புகழைத் தந்தது என்பது கூறி,  ‘என் முன்னோர் தந்தை பணி கடவாமை
போல யானும் அவ்வாறே  நடத்தல் என் குலதருமம் அன்றோ’  என்றான்
இராமன். ‘மண்ணில் மகர வேலை தொட்ட’ என இயைத்துப் பூமியின்
கடலைத் தோண்டிய எனப் பொருள் கூறுலும் ஒன்று. சகரரால்
தோண்டப்பட்டது.  ஆதலி்ன் ‘சாகரம்’எனக் கடலுக்குப் பெயர் ஆயிற்று.
‘இவர் குலத்தோர் உவர்நீர்க், கடல்தொட்டார் எனின் வேறுஓர் கட்டுரையும்
வேண்டுமோ’  (644.) என்ற  இடத்து  இவ்வரலாற்றைக்காண்க.        24

1630.‘மான் மறிக் கரத்தான் மழு ஏந்துவான்,
தான் மறுத்திலன் தாதைசொல்; தாயையே.