பூமிதேவி ; உனைப் பிரிந்து - உன்னைவிட்டுப்பிரிவதனால்; கண் இழந்திலள் என - பற்றுக்கோடு இழக்கவில்லை என்றுசொல்லும்படி; நீ தந்த கழலோன் செய்யும் - நீ பெற்ற வீரக்கழலை அணிந்தஇராமன் செய்வான். ‘புண்ணியம் தொடர்’ என்னும் அடைமொழி, பிறர்க்குத் தீங்கிழைக்கும் வேள்விகளும் உண்டு என்பதனைக் காட்டியது. தயரதன் நிலமகளுக்குக் கண் போன்று இன்றியமையாதவனேயன்றிக் கண்ணாக ஆகான். ஆதலின் அவன் பிரிவால் நிலமகள் பார்க்கும் கண்ணை இழப்பாள்என்பதனினும் பற்றுக்கோடு இழப்பான் என்பதே தகும். கண் - பற்றுக்கோடு. 35 1349. | ‘புறத்து, நாம் ஒரு பொருள் இனிப் புகல்கின்றது எவனோ, அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால்? பிறத்து, யாவையும் காத்து, அவை பின் உறத் துடைக்கும் திறத்து மூவரும் திருந்திடத் திருத்தும், அத் திறலோன். |
‘அறத்தின் மூர்த்தி - அறத்தின் வடிவமான பரம்பொருளே! வந்து- தன் திருவுள்ளத்தால் இவ்வுலகிற்கு வந்து ; அவதரித்தான் என்பது அல்லால் - இராமனாகப் பிறந்துள்ளான் என்பதையன்றி ; புறத்து - அதனின் வேறாக ; நாம் புகல்கின்றது ஒருபொருள் எவன் - இனி நாம் உரைக்கத்தக்கது யாது?; அத் திறலோன்- அந்த ஆற்றல் மிக்க இராமன்; யாவையும் - எல்லாப் பொருள்களையும் ; பிறத்து - தோற்றுவித்து ; காத்து - காப்பாற்றி ; பின்அவை உறத் துடைக்கும் திறத்து - இறுதியில் அவற்றை முற்றும் அழிக்கும் திறனுள்ள ; மூவரும் - பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளின் செயல்களும் ; திருந்திடத் திருத்தும் - திருத்தமடையத் திருத்துவான்.’ மும்மூர்த்திகளுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருளே இராமனாகத் தோன்றியுள்ளான் என்பது கூறப்பட்டது. பிறத்து - பிறந்து என்பதன் பிறவினை. 36 1350. | ‘பொன் உயிர்த்த பூ மடந்தையும், புவி எனும் திருவும், “இன் உயிர்த் துணை இவன்” என, நினைக்கின்ற இராமன், “தன் உயிர்க்கு” என்கை புல்லிது ; தற் பயந்து எடுத்த உன் உயிர்க்கு என நல்லன், மன் உயிர்க்கு எலாம் ; - உரவோய் ! |
|