பக்கம் எண் :

28அயோத்தியா காண்டம்

சுமந்திரன் கூற்று  

1357.பழுது இல் மா தவன், பின் ஒன்றும்
     பணித்திலன், இருந்தான் ; 
முழுதும் எண்ணுறும் மந்திரக்
     கிழவர் தம் முகத்தால்
எழுதி நீட்டிய இங்கிதம்,
     இறை மகற்கு ஏற்க.
தொழுத கையினன், சுமந்திரன்
     முன் நின்று, சொல்லும் :

     பழுது இல் மா தவன் - குற்றம் இல்லாத சிறந்த தவத்தையுடை
யோனாகியவசிட்டன் ;  பின் ஒன்றும் பணித்திலன் இருந்தான் - பிறகு
வேறு யாதும் சொல்லாமல்இருந்தான் ;  முழுதும் எண்ணுறும் மந்திரக்
கிழவர்
- எதனையும் தீரச்சிந்திக்கின்ற அமைச்சர்கள் ;  தம் முகத்தால்
எழுதி நீட்டிய இங்கிதம்
- தம்முகத்தினால் எழுதிக் கொடுத்த
குறிப்பினை ; இறை மகற்கு ஏற்க - தயரதனுக்குப்பொருந்த ; சுமந்திரன்
முன் நின்று
- சுமந்திரன் எதிரில் எழுந்து நின்று; தொழுத வகையினன்-
கும்பிட்ட கைகளையுடையவனாய் ;  சொல்லும் -சொல்வான்.         44

1358.‘ “உறத் தகும் அரசு இராமற்கு” என்று
     உவக்கின்ற மனத்தைத்
“துறத்தி நீ” எனும் சொல் சுடும் ; 
     நின் குலத் தொல்லோர்
மறத்தல் செய்கிலாத் தருமத்தை
     மறப்பதும் வழக்கு அன்று ; 
அறத்தின் ஊங்கு இனிக் கொடிது எனல்
     ஆவது ஒன்று யாதோ?

     ‘அரசு இராமற்கு உறத் தகும் என்று - இராமனுக்கு அரசுரிமை
பொருந்துதல்தக்கது என்று ;  உவக்கின்ற மனத்தை - மகிழ்கின்ற
மனத்தை ;  நீ துறத்திஎனும் சொல் சுடும் - நீ எங்களைப் பிரிகிறாய்
என்னும் சொல்லானது சுடுகிறது ;  நின் குலத் தொல்லோர் - உன் சூரிய
குலத்தில் தோன்றிய முன்னோர்கள் ;  மறத்தல் செய்திலா தருமத்தை -
மறவாமல் போற்றிய அறத்தை ;  மறப்பதும் வழக்குஅன்று - நீ மறந்து
கைவிடுதலும் முறைமை அன்று ;  இனி அறத்தின் ஊங்கு கொடிது -
(ஆதலால்) இனி அறத்தைவிடக் கொடியது ;  எனல் ஆவது ஒன்று
யாதோ
- என்று சொல்லத்தக்கது பிறிதொன்று எது?                45