பக்கம் எண் :

மந்திரப் படலம் 31

     அண்ணல் - தலைவனான இராமபிரான் ;  பிரியா வண்ண
வெஞ்சிலைக் குரிசிலும்
- தன்னை விட்டு என்றும் நீங்காத அழகியதும்
கொடியதுமான வில்லை ஏந்திய இளைஞனான இலக்குவனும் ;  மருங்கு
இனிது இருப்ப
- பக்கத்தில் இனிதாகஇருக்க ; பெண்ணின் இன் அமுது
அன்னவள் தன்னொடும்
- பெண்டிர்களுக்குள் இனியஅமுதம்
போன்றவளான சீதையோடும் ;  ஆண்டு இருந்தான் - அங்கு
வீற்றிருந்தான் ; அழகு அரு நறவு என - அச்சேர்த்தியின் அழகானது
அரிய தேனாக ;  தன் கண்ணும்உள்ளமும் வண்டு என - தன்
கண்களும் உள்ளமும் வண்டாக ;  களிப்புறக் கண்டான் -மகிழ்ச்சி
எய்தச் சுமந்திரன் கண்டான்.

     இராமபிரான் சீதையோடும் தம்பி இலக்குவனோடும் இருந்த காட்சி
யழகைப்பரிவில் மிக்க சுமந்திரன் கண்டு உவகை கொண்ட திறம் இங்கு
உரைக்கப்பட்டது. பிரியா என்னும்அடைமொழியைப் பெண்ணின் இன்
அமுதொடும் கூட்டி உரைத்தல் தகும். ஏனெனில் “அகலகில்லேன்இறையும்
என்று அலர் மேல் மங்கை உறை மார்பா !”  என்பது நம்மாழ்வார் வாக்கு
(திருவாய்மொழி 6 :10:10).                                       49

1363.கண்டு, கைதொழுது, ‘ஐய, இக்
     கடலிடைக் கிழவோன்,
“உண்டு ஒர் காரியம் ; வருக !” என,
     உரைத்தனன்’ எனலும்,
புண்டரீகக் கண் புரவலன்
     பொருக்கென எழுந்து, ஓர்
கொண்டல்போல் அவன், கொடி நெடுந்
     தேர்மிசைக் கொண்டான்.

     கண்டு கைதொழுது - சுமந்திரன் இராமனைப் பார்த்துக் கை கூப்பி
வணங்கி ;  ஐய - ஐயனே !  இக் கடல்இடைக் கிழவோன் - இந்தக்
கடலால் சூழப்பட்ட உலகுக்கு உரியவனான தயரத மன்னன்; ‘ஒர் காரியம்
உண்டு
-ஒரு காரியம் உள்ளது ;  வருக என - (ஆதலால்) இராமனை
அழைத்து வருக என்று ; உரைத்தனன்’ எனலும் - சொன்னான் என்ற
அளவில் ;  புண்டரீகக் கண் புரவலன் - செந்தாமரைக் கண்ணனாகிய
இராமன் ;  பொருக்கென எழுந்து - விரைவாகப்புறப்பட்டு ;  ஓர்
கொண்டல்போல்
- ஒரு கரிய மேகம் போல ;  அவன்கொடி நெடுந்
தேர்மிசைக் கொண்டான்
- அந்தச் சுமந்திரனது கொடி பறக்கும் நெடிய
தேரில்ஏறிக்கொண்டான்.

     கடலிடை - கடலால் சூழப்பட்ட இடம் ;  உலகு. கிழவோன் -
உரிமையுடையவன்.                                            50