வீர மறத்தொழில் குறித்து வருதலை; ‘வீரச் சேவகச் செய்கை’ (7281) என்ற பாடற்பகுதியால் அறிக. குந்தம் - ஒரு படைக்கலத்தின் பெயர். கணர் - கண்ணர் - தொகுத்தல்விகாரம். 12 1852. | மாக மணி வேதிகையில், மாதவி செய் பந்தர். கேகய நெடுங் குலம் எனச் சிலர் கிடந்தார்; பூக வனம் ஊடு, படுகர்ப் புளின முன்றில், தோகை இள அன்ன நிரையின் சிலர் துயின்றார். |
சிலர் - சில மகளிர்; மாதவி செய்பந்தர் - குருக்கத்திக் கொடியால் அமைக்கப் பெற்ற பந்தரில்; மாக மணி வேதிகையில் - ஆகாயத்தைப் போன்ற நீலமணிகளால் அமைந்த திண்ணையில்; கேகய நெடுங்குலம் என - மயிலின் பெருங்கூட்டம்போல; கிடந்தார் - உறங்கினார்; சிலர் - சில மகளிர்; பூக வனம் ஊடு- கமுகங்காட்டின் இடையே; படுகர் - மடுவிடத்தில்; புளின முன்றில் -மணல்மேடுகளில்; தோகை இள அன்ன நிரையின் - தோகையுடைய இளைய அன்ன வரிசைகளைப் போல; துயின்றார் - தூங்கினார். சிலர் மயில்போல, சிலர் அன்னம் போல உறங்கினர். நீலமணித் திண்ணையில்உறங்கியவர் நீல நிற மயில் போன்றார் என்றும், வெண்மையான மணல் மேடுகளில்உறங்கியவர்கள் வெள்ளையான அன்னம் போன்றார் என்றும் கூறியது. ஒரு நயம். வேதிகை -திண்ணை. பூகம் - கமுகு. புளினம் - மணல்மேடு. 13 1853. | சம்பக நறும் பொழில்களில், தருண வஞ்சிக் கொம்பு அழுது ஒசிந்தன எனச் சிலர் குழைந்தார்; வம்பு அளவு கொங்கையொடு வாலுகம் வளர்க்கும் அம் பவள வல்லிகள் எனச் சிலர் அசைந்தார். |
சிலர்-; சம்பக நறும் பொழில்களில் - நறுமணம் உள்ள சண்பகச் சோலைகளில்; தருண வஞ்சிக் கொம்பு அழுது ஒசிந்தன என - இளைய வஞ்சிக் கொடிகள் அழுது முறிந்தனபோல; குழைந்தார் - சோர்ந்து தங்கினார்கள்; சிலர்-; வம்பு அளவுகொங்கையொடு - கச்சு அணிந்த தனங்களுடன்; வாலுகம் வளர்க்கும் அம் பவள வல்லிகள்என - மணற்குன்றுகளில் வளர்கின்ற அழகியபவளக் கொடிகள்போல; அசைந்தார்- களைத்து உறங்கினார்கள். வாலுகம் - மணல்மேடு, முலை. பவளவல்லி - மகளிர் என உவமை காண்க. 14 1854. | தகவும் மிகு தவமும் இவை தழுவ, உயர் கொழுநர் |
|