பக்கம் எண் :

324அயோத்தியா காண்டம்

1861.‘வன் புலக் கல் மன
     மதி இல் வஞ்சனேன்,
என்பு உலப்புற உடைந்து
     இரங்கும் மன்னன்பால்,
உன் புலக்கு உரிய சொல்
     உணர்த்தச் செல்கெனோ?
தென்புலக் கோமகன்
     தூதின் செல்கெனோ?

     ‘வன் புலக் கல் மன மதி இல் வஞ்சனேன்- வலிய புலன்களையும்
கல்போன்றமனத்தையும்  உடைய அறிவற்ற  வஞ்சகனாகிய யான்; என்பு
உலப்புற  உடைந்து  இரங்கும்மன்னன்பால் -
உடம்பு அழியும் படி
மனம் முறிந்து வருந்தும் தசரதனிடத்து; உன் புலக்குஉரிய சொல்களை
உணர்த்தச்  செல்கெனோ? - 
உனது  அறிவு வாய்ந்த சீரிய
வார்த்தைகளைஉணர்த்தப் போகின்றேனோ (அல்லது) ; தென்புலக்
கோமகன் தூதின் செல்கெனோ? - !
இயமனது தூதுவன்போலச் செல்லக்
கடவேனோ’

     செய்தி சொல்லு முன்னரே தசரதன் இறந்துபடுவான் ஆதலின், ‘இயம
தூதன்போலச் செல்வேனோ’என்றான்.                            22

1862.‘ “நால் திசை மாந்தரும்,
     நகர மாக்களும்,
தேற்றினர் கொணர்வர் என்
     சிறுவன் தன்னை” என்று
ஆற்றின அரசனை,
     ஐய! வெய்ய என்
கூற்று உறழ் சொல்லினால்,
     கொலை செய்வேன்கொலோ?

     ‘ஐய! - இராமனே;  ‘நால்திசை மாந்தரும் - நான்கு திசைகளிலும்
உள்ளமனிதர்களும்; நகர மாக்களும் - நகர மக்களும்; ‘உன் சிறுவன்
தன்னை -
(தசரதனே!) உன் மகனை; தேற்றினர் கொணர்வர்’- அழைத்து
வருவர்’ என்று -; ஆற்றின அரசனை - (உயிர் நீங்காதபடி) ஆறுதல்
கூறிக் காத்த அரசனை; என் -என்னுடைய; கூற்று உறழ் சொல்லினால்-
இயமனை ஒத்த கொடிய வார்த்தையால்; கொலை செய்வேன்கொலோ?! -
உயிர் நீங்குமாறு செய்து விடுவேனோ.’