| தள்ளுறச் சுமந்து, எழுதரும் தமனியக் கொம்பில், - புள்ளி நுண் பனி பொடிப்பன, பொன்னிடைப் பொதிந்த, எள்ளுடைப் பொரி விரவின, - உள சில இளநீர். |
வள் உறை கழித்து - (இராமனைக் கண்டவுடன்) வாரினால் இயன்ற உறைகளை நீக்கி ; ஒளிர்வன வாள் - ஒளிவீசுகின்ற வாள்களோடு ; நிமிர் மதியம் தள்ளுறச் சுமந்து - நிமிர்ந்த சந்திரனைத் தள்ளாடியவாறு சுமந்து கொண்டு ; எழுதரும் தமனியக் கொம்பில் - எழுகின்ற பொன்னாலாகிய கொம்புகளில் ; உளசிலஇளநீர் - உள்ளனவாகிய இரண்டு இளநீர்கள் ; புள்ளி நுண்பனி பொடிப்பன -புள்ளிகளாகிய நுண்ணிய வியர்வை தோன்றுவனவும் ; பொன்னிடைப் பொதிந்த -இடையிடையே பொற் பொடி கலந்தனவுமாய் ; எள்ளுடைப் பொரி விரவின - தேமலாகிய எள்ளின் பொரிகள் ஆங்காங்கு விரியப் பெற்றன. மகளிரின் இமைகளை உறைகளாகவும், கண்களை வாளாகவும், முகத்தை மதியாகவும், அவர்களைக் கொம்பாகவும், வியர்வையைப் புள்ளிகளாகவும், தேமலைப் பொன்னாகவும்,பசலையை எட்பொரியாகவும், நகில்களை இளநீராகவும் உருவகித்தார். சில - ஈண்டு இரண்டு என்னும்பொருளில் வந்தது. 56 இராமன் தயரதனைச் சந்தித்தல் 1370. | ஆயது, அவ்வழி நிகழ்தர, ஆடவர் எல்லாம் தாயை முன்னிய கன்று என நின்று உயிர் தளிர்ப்ப, தூய தம்பியும், தானும், அச் சுமந்திரன் தேர்மேல் போய், அகம் குளிர் புரவலன் இருந்துழிப் புக்கான். |
ஆயது அவ் வழி நிகழ்தர - அத்தகைய செயல் அவ்விடத்து நடைபெற ; ஆடவர் எல்லாம் - இராமனைக் கண்ட ஆண்கள் எல்லாரும் ; தாயை முன்னிய கன்றுஎன நின்று - தாய்ப்பசுவை நினைந்த கன்று போல நின்று ; உயிர் தளிர்ப்ப- உயிர் மகிழ்ச்சியடைய; தூய தம்பியும் தானும் - தூய்மை நிறைந்த தம்பியானஇலக்குவனும் தானும் ; அச் சுமந்திரன் தேர்மேல் போய் - அந்தச் சுமந்திரனது தேரில் ஏறிச் சென்று ; அகம் குளிர் புரவலன் இருந்துழி - மனம் மகிழ்ந்திருக்கின்ற தயரதன் இருந்த மண்டபத்துள் ; புக்கான் - புகுந்தான். உள்ளத்தின் தளிர்ப்பு உயிரின் தளிர்ப்பாகக் கூறப்பட்டது. தம்பியும் தானும் புக்கான் - சிறப்பினால் ஒருமை வினைக்கொண்டு முடிந்தது, “வேயுயர் கானில் தானும்தம்பியும் மிதிலைப் பொன்னும் போயினன் என்றான்” என்பது |