பக்கம் எண் :

மந்திரப் படலம் 37

நளிநீர் நிலங்கள் - பெரிய நீரையுடைய கடலால் சூழப்பட்டமண்ணுலகை ;
தாங்குறு நிலையினை - போற்றிக் காத்தற்குரிய இராமனுடைய நிலையை ;
நிலையிட நினைந்தான் - அளந்து பார்க்கக் கருதி ;  விலங்கல் அன்ன
திண்தோளையும்
- இராமனுடைய மலைபோன்ற திண்மை வாய்ந்த
தோள்களையும் ;  மெய்த்திரு இருக்கும் அலங்கல் மார்பையும் -
உண்மையான திருமகள் உறையும் மாலையணிந்தமார்பையும் ;  தனது
தோள் மார்பு கொண்டு
- தன்னுடைய தோள்களையும் மார்பையும்
கொண்டு ;  அளந்தான் - அளவிட்டான்.

     தயரதன் இராமனைத் தழுவியதற்குக் காப்பிய ஆசிரியர் ஒரு காரணம்
கற்பித்துக் கூறலின் இது தற்குறிப்பேற்ற அணி. நினைந்தான் - முற்றெச்சம்.
மன்னன் மார்பில்திருமகள் உறைவதாகச் சொல்வது மரபு. இராமன்
திருமாலே ஆதலின் அவன் மார்பில் உறைபவளை‘மெய்த்திரு’ என்றார். 59

தயரதன் இராமனை வேண்டுதல்  

1373.ஆண்டு, தன் மருங்கு இரீஇ, உவந்து,
     அன்புற நோக்கி,
‘பூண்ட போர் மழு உடையவன்
     பெரும் புகழ் குறுக
நீண்ட தோள் ஐய ! 
     நிற் பயந்தெடுத்த யான், நின்னை
வேண்டி, எய்திட விழைவது ஒன்று உளது’
     என, விளம்பும்.

     ஆண்டு - அங்கு ;  தன் மருங்கு இரீஇ - தன்பக்கத்தில்
இராமனை இருக்கச் செய்து ;  உவந்து - மனம் மகிழ்ந்து ;  அன்புற
நோக்கி
- அன்பு தோன்றுமாறு உற்றுப் பார்த்து ;  ‘பூண்ட போர் மழு
உடையவன்
- தாங்கிய போர்க்கு உரிய மழுவாயுதத்தை உடையவனாகிய
பரசுராமனது ;  பெரும்புகழ் குறுக - மிக்க புகழ் தேயும்படி ;  நீண்ட
தோள் ஐய ! - நீண்ட தோள்களைஉடைய ஐயனே !  ;  நின் பயந்து
எடுத்த யான்
- நின்னை மகனாகப் பெற்று வளர்த்தயான் ;  நின்னை
வேண்டி எய்திட விழைவது ஒன்று உளது என
- உன்னைக் கேட்டுப்
பெறவிரும்புவதாகிய ஒரு காரியம் உண்டு’ என்று சொல்லி; விளம்பும் -
அதனைவிரித்துச் சொல்வானானான்.

     பூண்ட போர் மழு உடையவன் - பரசுராமன். அவன் புகழ் தேய,
இராமன் அவன்தந்த வில்லை வளைத்த திறம் பால காண்டத்தின்
இறுதியில் உள்ள பரசுராமப் படலத்தில்கூறப்பட்டது. இராமன் அரசபாரம்
ஏற்கவேண்டும் என்று மேலே கூறுதலின் அதற்குரிய ஆற்றல் அவனிடம்
உள்ளது என்பதனைக் காட்டப் பரசுராமனை வென்ற செய்தியினை
நினைவுபடுத்துகிறான். இரீஇ -அளபெடை. விளம்புதல் - விரித்துக்
கூறுதல்.                                                60