மனையின் நீங்கிய மக்களை - வீட்டை விட்டுப் பிரிந்து சென்ற பிள்ளைகளை; வைகலும் - நாள்தோறும்; நினையும் நெஞ்சினர் - நினைகின்ற நெஞ்சத்தோடு; கண்டிலர் நேடுவார் - காணாது தேடுகின்றவர்கள்; அனையர் வந்துற -அப்பிள்ளைகள் திரும்பத் தாமே வந்து சேர; ஆண்டு எதிர்ந்தார்கள் போல் - அங்கே(அப்பிள்ளைகளை) எதிர்ப்பட்ட பெற்றோர்களைப் போல் (மகிழ்ச்சி கொண்டு); இனியமாதவப் பள்ளி கொண்டு எய்தினார் - இனிமையான தம்முடைய தவச் சாலைக்கு (மூவரையும்)அழைத்துக்கொண்டு சென்றார்கள். வீட்டை விட்டுப் பிரிந்து சென்ற மக்கள் திரும்பவந்துழிப் பெற்றோர் அடையும்மகிழ்ச்சி. இங்கே இராமபிரானைக் கண்ட முனிவரர் மகிழ்ச்சிக்கு உவமையாயிற்று. 13 1939. | பொழியும் கண்ணின் புதுப் புனல் ஆட்டினர்; மொழியும் இன் சொலின் மொய்ம் மலர் சூட்டினர்; அழிவு இல் அன்பு எனும் ஆர் அமிர்து ஊட்டினர்; வழியில் வந்த வருத்தத்தை வீட்டினர். |
கண்ணின் பொழியும் புதுப்புனல் ஆட்டினர் - முனிவர் கண்களில் பொழிகின்ற கண்ணீராகிய புதிய நீரால் ஆட்டி; மொழியும் இன்சொலின் மொய்ம்மலர் சூட்டினர் -பேசுகின்ற இன்சொல்லாகிய நெருங்கிய மலர்களைச் சூட்டி; அழிவு இல் - கெடுதல்இல்லாத; அன்பு எனும் ஆர் அமிர்து ஊட்டினர் - அன்பு எனும் அரிய அமுதத்தைக் உண்ணக் கொடுத்து; (அம் முனிவர்), வழியில் வந்த வருத்தத்தை - (அம் மூவரும்) வழிநடையால் உடையராய வருத்தத்தை; வீட்டினர் - இல்லாதபடி போக்கினர். முனிவர்கள் இராமன் முதலிய மூவர்க்கும் உண்டாகிய வழிநடை வருத்தம் போக்கியவாறு.கண்ணில் வழியும் நீரால் அவர்களைக் குளிப்பாட்டி, இன் சொற்களாகிய மலர்களைச் சூட்டி,அன்பாகிய அமுதூட்டிப் போக்கினர். மூன்றும் முறையே செயல், சொல், மனம் மூன்றாலும் அவர்கள்இராமன்பால் கொண்ட அன்பின் வெளிப்பாடாயின. “புனையும் கண்ணி எனதுடைய வாசகம் சொல்மாலையே” என்ற ஆழ்வார் பாசுரம் ‘இன்சொலின் மொய்ம்மலர்’ என்பதனோடு ஒத்தது. “பொழிந்த உண்கண் நீர்ப் புதுப் புனல் சூட்டினார்” என்ற நகர்நீங்கு படல அடிகளை (1820.) இங்குமுதலடியோடு ஒப்பு நோக்குக. 14 நாட் கடன் செய்து அமுதுண்ண முனிவர் இராமனை வேண்டுதல் 1940. | காயும், கானில் கிழங்கும், கனிகளும், தூய தேடிக் கொணர்ந்தனர்; ‘தோன்றல்! நீ ஆய கங்கை அரும் புனல் ஆடினை, தீயை ஓம்பினை, செய் அமுது’ என்றனர். |
|