பக்கம் எண் :

கங்கைப் படலம் 379

     (இராமன்) துறை நறும் புனல் ஆடி - கங்கைத் துறையில் மணம்
வீசும் நீரில்குளித்து; கருதியோர் உறையுள் எய்தி - வேத முனிவரர்
தவச்சாலையை அடைந்து; உணர்வுடையோர் உணர் - ஞானிகளால்
உணரப்படுகின்ற;  இறைவனைக் கை தொழுது -பரம்பொருளைக் கை
கூப்பி வணங்கி; ஏந்து எரி ஓம்பி - உயர்ந்துள்ள யாகாக்கினியைவழிபட்டு;
பின் - பிறகு; அறிஞர் - ஞானியராய முனிவரது; காதற்கு -அன்பினுக்கு;
அமை விருந்து ஆயினான் - பொருந்திய விருந்தினனாக ஆனான்-.

     இராமனும் பரம்பொருளை வழிபட்டான் என்பது நான்
எடுத்துக்கொண்ட அவதாரத்துக்கு ஏற்ப, தன்னை மனிதனாகவே கருதிப்
பரம்பொருளை வழிபட்டான் என்க.                               26

1952.வருந்தித் தான் தர வந்த அமுதையும்,
‘அருந்தும் நீர்’ என்று, அமரரை ஊட்டினான்,
விருந்து மெல் அடகு உண்டு விளங்கினான் -
திருந்தினார் வயின் செய்தன தேயுமோ?

     வருந்தி - பாற்கடல் கடைந்து  வருத்தமுற்று  முயன்று;  தான் தர
வந்தஅமுதத்தையும் -
தான் கொடுக்க வந்த அமுதத்தையும்; அமரரை-
தேவர்களை; ‘நீர் அருந்தும் - நீங்கள் உண்ணுங்கள்’ என்று; ஊட்டினான்-
(தான் உண்ணாதுஅவர்களை) உண்பித்தவனாகிய இராமன்;  விருந்து -
முனிவர் இட்ட விருந்தாக;  மெல்அடகு - மென்மையான கீரையை;
உண்டு விளங்கினான் - உண்டான்;  திருந்தினார்வயின் செய்தன
தேயுமோ
- மனம் செம்மைப்பட்டவர்களிடத்துச் செய்த செயல்கள் உயர்வு
தாழ்வுபற்றிக் குறைபடுமோ? (படாது என்றபடி).

     தேவர் அமுதத்தையும் உண்ணாது தேவர்களை உண்பித்த இராமன்,
முனிவர்கள் இட்ட கீரைஉணவை விரும்பு உண்டது எவ்வாறு என்பதை
இறுதி அடி விளக்குகிறது. மனம் செம்மைப்பட்டவர்கள்பொருளின் உயர்வு
தாழ்வு கருத மாட்டார்கள். பொருளைக் கொடுத்தவர்களின் அன்பையே கருதி
உயர்வாக ஏற்றுக்கொள்வார்கள். இராமன் முனிவர்களின் அன்பைக் கருதி
அவர்கள் கொடுத்தசீரை உணவை அமுதிலும் சிறந்ததாக ஏற்றுக்கொண்டார்.
வேற்றுப் பொருள்வைப்பணி.                                    27