1956. | காழம் இட்ட குறங்கினன், கங்கையின் ஆழம் இட்ட நெடுமையினான், அரை தாழ விட்ட செந் தோலன், தயங்குறச் சூழ விட்ட தொடு புலி வாலினான். |
காழம் இட்ட குறங்கினன் - காழம் என்னும் ஒருவகை உடையை இறுக அணிந்த துடையைஉடையவன்; கங்கையின் ஆழம் இட்ட நெடுமையினான் - கங்கையின் ஆழத்தைக் கண்டறிந்தபெருமை படைத்தவன்; அரை தாழ விட்ட செந்தோலன் - இடுப்பிலிருந்து கீழே தொங்கவிடப்பட்ட சிவந்த வார்ப்பட்டை உடையவன்; தயங்குற - விளங்கும்படி; சூழவிட்ட - இடுப்பைச் சுற்றிக் கட்டிய; தொடு புலி வாலினான் - ஒன்றோடொன்றசேர்த்துக் கட்டப் பெற்ற புவி வாலை உடையவன். காழம் எனப்து இடுப்பிலிருந்து தொடைவரை அணியும் சிறிய காற்சட்டை. காழகம் எனவும்வரும. அரையிலிருந்து தொங்கவிடப்பெற்ற செந்திறத் தோலாகிய வார்ப் பட்டை அம்பு முதலியனதீட்டுதற்காம் என்க. புலிவால்களை ஒன்றோடொன்று பிணைத்து இடுப்பைச் சுற்றிக் கட்டியுள்ளான். 4 1957. | பல் தொடுத்தன்ன பல் சூல் கவடியன், கல் தொடுத்தன்ன போலும் கழலினான், அல் தொடுத்தன்ன குஞ்சியன், ஆளியின் நெற்றொடு ஒத்து நெரிந்த புருவத்தான். |
பல் தொடுத்து அன்ன சூல் பல் கவடியன் - பற்களைத் தொடுத்தாற் போன்றஉட்குடைவான பல பலகறைகளை அணிந்தவன்; கல் தொடுத்து அன்ன போலும் கழலினான் - கற்களை ஒன்று சேர வைத்தாற் போன்ற திண்ணிய வீரக்கழலை உடையவன்; அல் தொடுத்தன்ன குஞ்சியன் - இருளைப் பின்னினாற் போன்ற கரிய தலை மயிரை உடையவன்; ஆளியின்நெற்றொடு ஒத்து தெரிந்த புருவத்தான் - ஆளிச் செடியின் வற்றி உலர்ந்த காயைப் போன்றுநெறிப் புடைய புருவத்தை உடையவன். கவடி - பலகறை. சோழி எனவும் வழங்கும். தற்காலத்துக் குறவர்கள் இவ்வகை மணிகளைச்கோத்தணிதல் கண்கூடு. ஆடவர் தலைமயிரைக் குஞ்சி என்றல் வழக்கு. ஆளி நெற்று புருவ நெரிப்புக்குஉவமையாம். 5 1958. | பெண்ணை வன் செறும்பின் பிறங்கிச் செறி வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன், கண் அகன் தட மார்பு எனும் கல்லினன், எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான். |
|