பக்கம் எண் :

குகப் படலம் 391

  இடியுடை மேகம் என்ன
     இரைத்து அவண் காத்து நின்றான்.

     அடி தொழுது - (இராமன் இன்று எம்மொடு தங்குக என்று சொல்லக்
கேட்ட குகன்)இராமன் திருவடிகளை வணங்கி; உவகை தூண்ட - மகிழ்ச்சி
மேல் மேல் மிக;  ஆழிஅன்ன துடியுடைச் சேனை வெள்ளம்
அழைத்தனன்
- கடலை ஒத்த துடிப்பறையோடு கூடிய தனது சேனைப்
பெருக்கை அழைத்து;  பள்ளியைச் சுற்ற ஏவி - (விலங்கு முதலியவற்றால்
துன்பம்நேராவாறு) அவர்கள் தங்கியுள்ள தவச்சாலையைச் சுற்றிப்
பாதுகாக்கக் கட்டளையிட்டு; வரிசிலை பிடித்து - (தானும்) கட்டமைந்த
வில்லைப் பிடித்து; வாளும் வீக்கி -(முன்பு கழித்த) வாளையும்
அரைக்கச்சிலே கட்டி;  வாய் அம்பு பற்றி - கூரிய அம்மைப்பிடித்து;
இடியுடை மேகம் என்ன இரைத்து - இடியோடு கூடிய மழை மேகம்
போல உரத்த சத்தம்இட்டு;  அவண் - அத்தவச்சாலையில்;  காத்து
நின்றான் -
அம்மூவரையும் காவல்செய்து  நின்றான்.

     இராமன் அனுமதி தந்த மகிழ்ச்சியால் அவனைக் காக்கும் பொறுப்பை
மிகச் சிறப்பாகச்செய்கிறான் குகன்.                               19

இராமன் நகர் நீங்கிய காரணத்தை உசாவி அறிந்து குகன் வருந்துதல்  

1972.‘திரு நகர் தீர்ந்த வண்ணம்,
     மானவ! தெரித்தி’ என்ன,
பருவரல் தம்பி கூற,
     பரிந்தவன் பையுள் எய்தி,
இரு கண் நீர் அருவி சோர,
     குகனும் ஆண்டு இருந்தான், ‘என்னே!
பெரு நிலக் கிழத்தி நோற்றும்,
     பெற்றிலள் போலும்’ என்னா,

     ‘மானவ - பெருமை படைத்தவனே!;  திரு நகர் தீர்த்த வண்ணம்
தெரித்தி’ என்ன-
அயோத்தி நகரை விட்டு நீங்கி வனம் புகுந்த
காரணத்தை விளக்கக் கூறுக என்று குகன்கேட்க; பருவரல் தம்பி கூற -
துன்பத்தை உடைய இலக்குவன் எடுத்துச் சொல்ல; குகனும்பரிந்த வன்
பையுள் எய்தி -
குகனும் இரங்கியவனாய்த் துன்பமுற்று;  இரு கண் நீர்
அருவிசோர -
இரண்டு கண்களிலிருந்து  நீர் அருவிபோலக் கீழே விழ;
‘என்னே!பெருநிலக்கிழத்தி நோற்றும் - ஐயகோ! பெருநிலமகள்
இராமனால் ஆளப்படுதற்கும் தவம்செய்திருத்தும்; பெற்றிலள் போலும்-
அந்தப் பாக்கியத்தைப் பெற்றாளில்லையே; என்ன - என்று சொல்லி;
ஆண்டு இருந்தான் - அத்தவச் சாலைக்குப் புறம்பேதங்கியிருந்தான்.