பக்கம் எண் :

44அயோத்தியா காண்டம்

  சுமந்திரன் தடந் தேர்மிசை,
     சுந்தரத் திரள் தோள்
அமைந்த மைந்தனம், தன் நெடுங்
     கோயில் சென்று அடைந்தான்.

     நிவந்த அந்தணர் - உயர்ந்த வேதியரும்;  நெடுந்தகை மன்னர் -
பெருந்தன்மை பொருந்திய அரசர்களும்;  நகரத்து உவந்த மைந்தர்கள் -
அயோத்தி நகரத்தில் வாழும் தன்னைக் காணுதலில் பெருமகிழ்ச்சி யடையும்
இளைஞர்களும்;  மடந்தையர் - பெண்களும்; உழை உழை தொடர -
பக்கங்களிலே சூழ்ந்துவர;  சுந்தரத் திரள்தோள் அமைந்த மைந்தனும் -
அழகிய திரண்ட தோள்களையுடைய இராமனும்; தன் நெடுங் கோயில் -
தனது பெரிய மாளிகையை; சென்று அடைந்தான் - போய்ச் சேர்ந்தான்.

     நிவப்பு - உயர்வு குலம், அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றால் உயர்ந்தோர்
அந்தனர் ஆவர்.  தாடகையைக்கொன்று, சிவன் வில்லை முறித்து,
பரசுராமன் செருக்கினை அழித்ததோடு கட்டழகும் நிறைந்திருப்பவையாதலின்
இராமன் தோள்கள்  ‘சுந்தரத் திரள் தோள்’ என்று சிறப்பிக்கப்பட்டன. 
மைந்தனும் - உம்மை இறந்தது  தழுவியது; தந்தை போனபின் தனயனும்
சேர்ந்தான் என்பதை உணர்த்தியது.                               71

                            தயரதன் அரசர்களுக்கு ஓலை போக்குதல்

1385. வென்றி வேந்தரை, ‘வருக’ என்று,
     உவணம் வீற்றிருந்த
பொன் திணிந்த தோட்டு
     அரும் பெறல் இலச்சினை போக்கி,
‘நன்று சித்திர நளிர் முடி
     கவித்தற்கு, நல்லோய்!
சென்று, வேண்டுவ வரன்முறை
     அமைக்க’ எனச் செப்ப,

     வென்றி வேந்தரை வருக என்று - தயரதன்,  வெற்றி பொருந்திய
அரசர்களை அயோத்திக்கு  வருக என்று;  பொன் திணிந்த தோட்டு -
பொன்னாலாகிய ஓலையிலே;  உவணம்  வீற்றிருந்த - கருடனது  வடிவம்
பெருமையோடு திகழ்ந்த; அரும் பெறல் இலச்சினை போக்கி -பெறுதற்கு
அரிய தன் அடையாள முத்திரையைவிட்டு அனுப்பி்;  ‘நல்லோய் - (பின்பு
வசிட்டமுனிவனை நோக்கி) பெரியீர்; சென்று -நீர் சென்று; சித்திர நளிர்
முடி -
சித்திர வேலைப்பாடமைந்த பெருமை தங்கிய முடியை; நன்று
கவித்தற்கு -
இராமனுக்கு நன்றாகச் சூட்டுதற்கு;  வேண்டுவ வரன்முறை 
அமைக்க -
வேண்டுவனவற்றை முறைப்படி அமைத்திடுக;’  எனச் செப்ப -
என்று சொல்ல.