கிழங்கை; கல்லி - தோண்டி; வாங்கிய - எடுத்த; குழிகளை - பள்ளங்களை; நிறைப்பன - நிறைக்கும் தன்மையை; காணாய் - பார்ப்பாயாக. வில்லி - வேட்டுவருள் ஒரு சாதியினர் எனலும் ஆம். கொடிகளில் கட்டப்பெற்ற தேனடையை மூங்கில்கள் மோதித் தாக்க அத்தேனடை கெட்டுத் தேன்வழிந்து கவலைக் கிழங்கு அகழ்ந்த குழியைத் தூர்த்து நிரப்பும் என்க. கொல்லிப்பண்மருதயாழ்த் திறமாதலின் மலை நிலத்தவர்க்கு ஏலாதாயினும் இங்கே அப்பண் கேட்ட எனப்பொருள்படுத லன்றி ‘எழுப்பிய’ எனப் பொருள் படுதல் இன்று ஆதலின் அமையும் என்க. கொடி நெடுங்கவலை - நெடுங் கொடிக் கவலை எனக் கொள்ளப்பட்டது. 13 2059. | ‘ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே! மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி அருவி நீர்கொடு வீச, தான் அப் புறத்து ஏறி, கருவி மா மழை உதிர்ப்பது ஓர் கடுவனைக் - காணாய்! |
ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே- நீங்காத பெண்மை என்று சொல்லப்படும் ஓர் உடலுக்கு உயிர் போலச் சிறந்தவளே! மருவு காதலின் - மிகுந்தஅன்புடன்; இனிது - இன்பமாக; உடன் ஆடிய மந்தி- ஆண் குரங்காகிய தன்னோடுநீராடிய பெண்குரங்கு; அருவி நீர் கொடு வீச - அருவி நீரைக் கொண்டு (தன்மேல்) தூவ; தான்- (ஆண் குரங்கு); அப்புறத்து ஏறி - மலையின் மற்றொரு பக்கத்தில் மேல் ஏறி; கருவி மாமழை - தொகுதி கொண்ட பெரிய மேகத்தை; உதிர்ப்பது -நீரைச் சிந்தச் செய்வதாகிய; ஓர் கடுவனை - ஓர் ஆண்குரங்கை; காணாய் -. நீராடுகிற போது மந்தி அருவி நீரைத் தூவ, கடுவன் மலைமேல் ஏறி மேக நீரை அம்மந்திமேல் வீசி ஆண்மை காட்டியதென்க. கருவி - தொகுதி எனப் பொருள்படும் உரிச்சொல் ‘கருவிதொகுதி’ (தொல். சொல். உரி. 56.) இங்குத் தொகுதியாவது இடி மின்னல் முதலியவற்றின்கூட்டம், பெய்யும் மேகம் என்றவாறாம். கடுவன் - ஆண் குரங்கு. மந்தி - பெண் குரங்கு.இக்காலத்துப் பேர் உருவுடைய ஆண் குரங்கை ‘மந்தி’ - என வழங்கல் உலகவழக்கு, 14 2060. | ‘வீறு பஞ்சினில் அமிழ்த நெய் மாட்டிய விளக்கே! சீறு வெங் கதிர் செறிந்தன போர்கல, திரியா |
|