இப்பாட்டு, குளகம். இராமனுக்கு முடிசூட்டுதற்கு அமைச்சர்களின் இசைவைப் பெற்ற தயரதன், மேற்கொண்டு செய்யவேண்டுவனவற்றைச் செய்யத் தொடங்கி அரசர்களுக்கு அழைப்பு விடுத்து, முறைப்படிஆவன செய்ய வசிட்டனை வேண்டினான். அரசர், பிறர்க்கு விடுக்கும் ஒலையில் தன் முத்திரையை இட்டு அனுப்புதல் மரபு. 72 மன்னர்களிடம் இராமன் முடிபுனைதலைத் தயரதன் தெரிவித்தல் 1386. | உரிய மா தவன் ஒள்ளிது என்று உவந்ததன், விரைந்து ஓர் பொரு இல் தேர்மிசை, அந்தனர் குழாத்தொடும் போக,- ‘நிருபர்! கேண்மின்கள், இராமற்கு நெறி முறைமையினால் திருவும் பூமியும் சீதையின் சிறுந்தன’ என்றான். |
உரிய மா தவன் - முடிசூட்டுதற்கு உரிய பெரிய தவத்தைச் செய்தவனான வசிட்ட முனிவன்;ஒள்ளிது என்று உவந்தனன் - நல்லது என்று சொல்லி மகிழ்ந்தவனாய்; விரைந்து -விரைவாக; ஓர் பொரு இல் தேர்மிசை - ஒப்பற்ற ஒரு தேரில் ஏறி; அந்தணர் குழாத்தொடும் போக - வேதியர் கூட்டத்தோடும் செல்ல; ‘நிருபர் கேண்மின்கள் - (தயரதன் தன்அருகே இருந்த அரசர்களைப் பார்த்து) அரசர்களே! கேளுங்கள்; நெறி முறைமையினால் - அரச நீதி முறைப்படி; இராமற்குத் திருவும் பூமியும் - இராமனுக்கு அரசச்செல்வமும் நாடும்; சீதையின் சிறந்தன - சீதைபோலச் சிறந்தனவாய் உள்ளன;’ என்றான் - என்று சொன்னான். இங்குக் குறிக்கப்படும் அரசர்கள் ஓலை பெற்று வந்தவர் அல்லர்; தயரதன் அருகில் திறை செலுத்தவும், காணவும் வந்தவர்கள் ஆவர். நிருபர், அண்மைவிளி. சீதையின் - ‘இன்’ ஒப்புப்பொருளில்வந்தது; உறழ்ச்சிப் பொருளில் வந்ததாகவும் கொள்ளலாம். 73 மன்னர்கள் தயரதன் கருத்தை வரவேற்றல் 1387. | இறைவன் சொல் எனும் இன் நறவு அருந்தினர் யாரும், முறையில் நின்றிலர்; முந்துறு களியிடை மூழ்கி, நிறையும் நெங்சிடை உவகை போய் மயிர் விழி நிமிர, உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார். |
|