பக்கம் எண் :

மந்திரப் படலம் 47

                                     கலிவிருத்தம்

1389.‘மூ - எழு முறைமை எம் குலங்கள் முற்றுறப்
பூ எழு மழுவினால் பொருது போக்கிய
சேவகன் சேவகம் செகுத்த சேவகற்கு,
ஆவ இவ் உலகம்; ஈது அறன்’ என்றார் அரோ.

     ‘மூ எழு முறைமை - இருபத்தொரு தலைமுறை;  எம் குலங்கள்
முற்றுற -
எங்கள்அரசர் குடியெல்லாம் அழியுமாறு;  பூ எழு மழுவினால்
பொருது போக்கிய சேவகன் சேவகம்
-கூர்மை பொருந்திய
மழுப்படையினால் போர் செய்து இல்லாமற் செய்த வீரனாகிய பரசுராமனது
வீரத்தை; செகுத்த சேவகற்கு - கெடுத்த வீரனாகிய இராமனுக்கு;
உலகம் ஆவ -
இந்த உலகம்உரிமையாவதாக!  ஈது அறன் என்றார் -
இச்செயல் அறத்தொடு பொருந்தியதே’  என்றுசொன்னார்கள்.

     அரோ - அசை. பரசுராமனது  செருக்கை அழித்தபோதே இராமனுக்கு
இவ்வுலகம் தகுதியால் உரிமையாயிற்று;இதனை வெளிப்படுத்தி முடிசூட்டுதல்
மிகறவும் ஏற்புடைத்தே என அரசர் தம் எண்ணத்தை உவமையோடு
தெரிவித்தனர். பூ - கூர்மை.                                 76

                        தயரதன் வினாவும் வேத்தவையின் விடையும்

1390.வேறு இலா மன்னரும் விரும்பி, இன்னது
கூறினார்; அது மனம் கொண்ட கொற்றவன்,
ஊறின உவகையை ஒளிக்கும் சிந்தையான்.
மாறும் ஓர் அளவை சால் வாய்மை கூறினான்.

     வேறு இலா மன்னரும் விரும்பி - கருத்து மாறுபாடில்லாத
மன்னரும் இராமன் முடிசூடுதலை விரும்பி; இன்னது கூறினார் - இவ்வாறு
கூறினர்;  அது மனம் கொண்ட கொற்றவன் -அதனைக் கருத்தில்
கொண்ட தயரதன்;  ஊறின உவகையை ஒளிக்கும் சிந்தையான் -
தன்னுள்ளேசுரந்த மகிழ்ச்சியை வெளிப்படாது மறைக்கும் கருத்தினனாய்;
மாறும் ஓர் - பிறிதொரு;அளவை சால்வாய்மை கூறினான் - (அவர்கள்
மனத்தை) அளத்தற்குரிய ஒரு வாய்ச்சொல்லைச்சொன்னான்.

     வேறிலா மன்னர் - கருத்தொருமித்த மன்னர்கள். வாய்மை -
வாய்ச்சொல்.  அளவை சால்வாய்மை - அளந்தறியும் சொல்.          77

1391.‘மகன்வயின் அன்பினால் மயங்கி, யான் இது
புகல, நீர் புகன்ற இப் பொம்மல் வாசகம்,
உகவையின் மொழிந்ததோ? உள்ளம் நோக்கியோ?
தகவு என நினைந்தது எத் தன்மையால்?’ என்றான்.