உள்ளே பிணக்கு உடையாரைப்போல்; களைகட்கிலார் - களை பறிக்காதவர்களாய்; உயங்கினார் - வாடிக்கிடந்தார். கணவரோடு ஊடிய மகளிர் தொழில் செய்ய விருப்பமின்றி இருத்தல் போலக் களைபறியாமல்இருந்தனர் கடைசியர். எள்மலர் - மூக்கிற்கு உவமை. பூசல் - ஒலி - ஈண்டு ஒலிக்கு இடனாகியதொழிலைக் குறித்தது; இலக்கணை என்பர். 22 2124. | ஒதுகின்றில கிள்ளையும்; ஓதியர் தூது சென்றில, வந்தில, தோழர்பால்; மோதுகின்றில பேரி, முழா; விழாப் போதுகின்றில, பொன் அணி வீதியே. |
கிள்ளையும்- கிளிகளும்; ஓதுகின்றில - பேசுதல் ஒழிந்தன; ஓதியர்- கூந்தலையுடைய மகளிர்; தோழர்பால் - காதல் தோழர்கள் இடத்தில்; தூது சென்றில - (அப்பறவைகள்) தூது செல்லவில்லை; வந்தில - (அவர் சொல்லுடன்) மீண்டு வருதலையும் செய்யவில்லை; பேரி - பெரு முரசும்; முழா - முழவும்; மோதுகின்றில - அடித்து முழக்கப்படாதொழிந்தன; பொன் அணி வீதி -பொன்னால் அழகு செய்யப்பெற்ற வீதிகளில் விழாப் போதுகின்றில - விழாஊர்வலங்கள் செல்லவில்லை. ஒதுகின்றில - வேதம் சொல்லுதலை ஒழிந்தன என்றும் பொருள். வேதம் ஓதும் சிறார்உரைப்பது கேட்டுக் கிளிகளும் வேதம் ஓதும். “ வளைவாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும்”(பெரும்பாண்......300) என்பது காண்க. இராமன் பிரிவால் “கிள்ளையொடு பூவை அழுத” (1701) என முன்னர்க் கூறினார் ஆதலின் அதற்கேற்ப இங்கே ‘கிள்ளையும் ஒதுகின்றில’ என்றார்.பறவைகள் காதலர் இடையே தூது செல்லும் ஆதலின், அச்செயல் நிகழவில்லை. எனவே இன்பம்இழந்தது நாடு என்றார். ‘ஏ’ ஈற்றசை. 23 2125. | பாடல் நீத்தன, பண் தொடர் பாண் குழல்; ஆடல் நீத்த, அரங்கொடு அகன் புனல்; சூடல் நீத்தன, சூடிகை; சூளிகை மாடம் நீத்தன, மங்கல வள்ளையே. |
பண் தொடர்- இசையொடு தொடர்ந்த; பாண் குழல்- இசைக்கின்ற வேய்ங்குழல்கள்; பாடல் நீத்தன - இசை பாடுதலை ஒழிந்தன; அரங்கொடு அகன் புனல்- நாட்டிய அரங்குகளோடு அகன்ற நீர்நிலைகள்; ஆடல் நீத்த - ஆடுதலை ஓழிந்தன; சூடிகை- தலை உச்சி; சூடல் நீத்தன - மலர் சூடுதலை ஒழிந்தன; சூளிகை மாடம் -நிலாமுற்றத்தை உடைய மாளிகைகள்; மங்கல வள்ளை நீத்தன - மங்கலப் பாடல்கள் பாடப் பெறுதலை ஒழிந்தன. |