நிறைய இருந்தும் மதகு வழியே நீர் பாய்ச்சுவார் ‘இல்லாமையால் தலைமடைப் பயிர்கள் காய்ந்துகிடத்தலுக்கு உவமையாயிற்று. தலைக்கடை என்பதனைக் கடைத்தலை எனல் இலக்கணப்போலி; அஃதாவது சொற்கள் முன்பின்னாக மாறி நிற்றலாதலின். ‘ஏ’ ஈற்றசை. 26 2128. | நாவின் நீத்து அரு நல் வளம் துன்னிய, பூவின் நீத்தென, நாடு, பொலிவு ஓரீஇ, தேவி நீத்து அருஞ் சேண் நெறி சென்றிட, ஆவி நீத்த உடல் எனல் ஆயதே. |
நாவின் நீத்து அரு நல் வளம் துன்னிய- நாவினால் சொல்ல இயலாத நல்ல வளங்கள் நெருங்கியிருக்கப்பெற்ற; நாடு - கோசலநாடு; பூவின் நீத்தென - தாமரைப்பூவை இழந்ததாக; தேவி - அத்தாமரைப் பூவில் உறைபவளாகிய திருமகள்; நீத்து - (அந்நாட்டை விட்டு) நீங்கி; அருஞ்சேண் நெறி- பின்பற்றிச் செல்லுதற்கரிய நெடுந்தொலைவாகிய வழியிலே; சென்றிட -சென்றிடுதலான்; பொலிவு ஒரீஇ - தன் அழகும் கவர்ச்சியும் நீங்கி; ஆவி நீத்த உடல் - உயிர் போன உடல்; எனல் - என்று சொல்லுமாறு; ஆயது -ஆகிவிட்டது. “தாமரை நீத்தெனப் பார் துறந்தனள் பங்கயச் செல்வியே” (2120) என்பதை ஒப்புநோக்குக. ‘உயிர் போன உடல்’ சுற்றியிருப்பார்க்கு அச்சம் தருதல் போல இந்நாடும்காண்பார் அஞ்சுமாறு பொலிவிழந்ததாம். “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” (புறநா.186) என்பவாதலின் மன்னனை இழந்த நாடு உயிரற்ற உடல் போல ஆயிற்று என்றார். ‘ஏ’ ஈற்றசை. 27 பொலிவழிந்த நாட்டைக் கண்ட பரதன் துன்புறுதல் 2129. | என்ற நாட்டினை நோக்கி, இடர் உழந்து, ஒன்றம் உற்றது உணர்ந்திலன், உன்னுவான், ‘சென்று கேட்பது ஓர் தீங்கு உளது ஆம்’ எனா, நின்று நின்று, நெடிது உயிர்த்தான்அரோ! |
என்ற - முன் கூறியவாறு உள்ள; நாட்டினை - கோசல நாட்டை; நோக்கி - (பரதன்) பார்த்து; இடர் உழந்து - பெருந்துன்பத்தாற் கலங்கி; உற்றது ஒன்றும் உணர்ந்திலன் - நிகழ்ந்த செய்திகள் ஒன்றும் உணராதவனாய்; ‘சென்றுகேட்பது ஓர் தீங்கு’ - நாம் போய்க் கேட்கப் போகின்ற தீய செய்தி ஒன்று; உளதுஆம்’ எனா - இப்பொழுது நேர்ந்துள்ளதாகும் என்று; உன்னுவான் - கருதியவனாய்; நின்று நின்று - தயங்கிச் சோர்ந்து; நெடிது உயிர்த்தான் - பெருமூச்சுவிட்டான். |