பக்கம் எண் :

492அயோத்தியா காண்டம்

     சிறந்த பரதன்; அன்ன தன்மை - மேற்கண்ட தன்மையுடைய;
அகநகர் - நிலைகெட்டநகரின் உட்பகுதியே; நோக்கினன் - பார்த்தான்
(சிந்தித்தான்); பின்னை - பிறகு;(சத்துருக்கனனை நோக்கி) இளையவனே!-
தம்பியே;  ஈது - இவ் அயோத்தி; மன்னன்வைகும் வளநகர் போலும் -
தயரத மன்னன் வீற்றிருந்த ஆட்சி செய்யும் வளமான நகராகவாஉள்ளது?.
என்ன தன்மை - எந்தத் தன்மையை உடையதாய் உள்ளது;  என்றான் -.

     நகர் அகம் என்பது அகநகர் என மாறியது. அரசன் இல்லாத நகரம்
போல உள்ளது என்றான்.‘போலும்’ என்றது  ஐய வினா? முன் ஏழு
பாடல்களாற் சொல்லிய நகரின் அழகிழந்த தோற்றத்தைஇச்செய்யுளில்
‘அன்ன தன்மை’ என்பது  குறிப்பிடும்.                             36

நகரின் பொலிவு அழிவைக் காட்டுதல்  

2138.‘வேற்று அடங்கலர் ஊர் என மெல்லிதால்;
சூல் தடங் கருங்கார் புரை தோற்றத்தான்
சேல் தடங் கண் திருவொடும் நீங்கிய
பால்தடங் கடல் ஒத்தது, பார்’ என்றான்.

     ‘பார் - அயோத்தி; வேற்று அடங்கலர்  ஊர் என மெல்லிதால் -
மனம்வேறுபட்ட பகைவரது ஊர் போல அற்பமாக அழகிழந்துள்ளது; சூல்
தடங் கருங்கார்புரை
-சூல்கொண்ட பெரிய கரிய மேகம் போன்ற;
தோற்றத்தான்- வடிவம் உடைய திருமால்; சேல் தடங்கண் திருவொடும்-
கயல்மீன் போன்ற அகன்ற கண்களை உடைய திருமகளொடும்; நீங்கிய -
நீங்கிச் செல்லுதலால்;  (வறிதாகிப் போன) பால் தடங்கடல் ஒத்தது’-
பெரிய திருப்பாற்கடலை ஒத்ததாக ஆயிற்று; என்றான் -.

     அடங்கலர் - பகைவர் ‘அடங்கார்’ என அழைப்பது இலக்கிய வழக்கு.
‘மெல்லிது’ - அற்பமானதுஎன்பது பொருள். அழகிழந்து அவலம் உறுதலின்
அற்பமாயிற்று. திருமால் திருமகளொடும் நீங்கியதிருப்பாற்கடலை அயோத்தி
நகர்க்கு உவமையாக்கினான். அவனை அறியாமலே அவன் உள்ளுணர்வு
இராமனும் சீதையும் நீங்கிய அயோத்தியை நினைந்து கூறினாற் போலத்
‘திருவொடும்’ என்றஉடனிகழ்ச்சிக்குப் பிறிதொரு பொருள் (திருமால்)
வேண்டுதலின் ‘கார்புரை தோற்றத்தான்’திருமால் எனல் பொருந்துவதாயிற்று.
பார் என்பது உலகம் என்னும் பொதுப்பொருள் உடையது ஆயினும்இடம்
நோக்கி அயோத்தியைக் குறித்ததாம்.                              37

சத்துருக்கனன் மறுமொழி  

2139.குரு மணிப் பூண் அரசிளங் கோளரி
இரு கை கூப்பி இறைஞ்சினன், ‘எய்தியது