| ஒரு வகைத்து அன்று உறு துயர்; ஊழி வாழ் திரு நகர்த் திரு தீர்ந்தனள் ஆம்’ என்றான். |
குரு மணிப் பூண் - நிறம் அமைந்த மணிக் கற்கள் அழுத்திய அணிகளை (அணிந்த); அரசு இளங் கோளரி- அரசிளஞ் சிங்கம் ஆகிய சத்துருக்கனன்; இரு கை கூப்பிஇறைஞ்சினன் - தன் இரண்டு கைகளையும் குவித்து (ப் பரதனை) வணங்கி; (இப்போது இந்நகரின் நிலையைப் பார்த்தால்) ‘எய்தியது உறு துயர் - நேர்ந்துள்ள மிக்கதுயரம்; ஒரு வகைத்து அன்று - ஒரு தன்மைப்பட்டது அன்று; (அன்றியும்) ஊழி வாழ்- கற்ப முடிவுக்காலம் வரையும் வாழக்கூடிய; திருநகர் திரு - சிறந்த இந்த நகரத்துச்சீதேவி (திருமகள்); தீர்ந்தனள் ஆம்’ - நகரத்தை விட்டு அடியோடு போய்விட்டான்ஆகும்; என்றான் -. எல்லாரினும் இளையவனும், தயரத மாமன்னனின் மகனும் ஆதலின் சத்துருக்கனன் ‘அரசிளங்கோளரி’ எனப் பெற்றான். மூத்தோர்பால் ஒன்று சொல்லும் போது வணங்கிக் கூறல் மரபு. உறு -மிகுதி. “அவைதாம், உறு, தவ, நனி என வரூவும் மூன்றும், மிகுதி செய்யும் பொருள என்ப” (தொல்- சொல் உரி. 3) என்பது காண்க. ஊழி வாழ்தலை நகர்க்கும், திருவுக்கும் ஏற்புழிஏற்றிக் கொள்க. 38 பரதன் தயரதன் வாழுமிடத்தை அடைதல் 2140. | அனைய வேலையில், அக் கடைத் தோரண மனையின் நீள் நெடு மங்கல வீதிகள் நினையும் மாத்திரத்து ஏகிய நேமியான் தனையனும், தந்தை சார்விடம் மேவினான். |
அனைய வேலையில் - இவ்வாறு உரையாட்டு நிகழும் பொழுதில்; அக்கடைத் தோரணமனையின் - அந்த வாயிலிற் கட்டிய தோரணக் கொடிகளையுடைய மாளிகைகளால்; நீள் நெடுமங்கல வீதிகள் - நெடிதுயர்ந்த மங்கலம் பொருந்திய தெருக்களை; நினையும்மாத்திரத்து - நினைக்கும் பொழுதிற்குள் (கணப் பொழுதில்); ஏகிய - கடந்து சென்ற; நேமியான் தனையனும் - சக்கரவர்த்தி தயரதன் குமாரனாகிய பரதனும்; தந்தை - தன்தந்தையாகிய தயரதன்; சார்வு இடம் - வழக்கமாகத் தங்கியுள்ள அரண்மனையை; மேவினான் - சென்று அடைந்தான். நேமி - சக்கரம். நேமியான் - ஆணைச் சக்கரம் உடைய அரசன்; இங்குத் தயரதன்.பரதன் தான் கண்ட காட்சிகளால் முன்பே “மன்னன் வைகும் வளநகர் போலும் ஈது?” என்று (2137)ஐயப்பட்டான் ஆதலின், அரசனை முதலிற் பார்க்க விரும்பினான். நெடுந் தெருக்கள் பல கடந்து அரச மாளிகையை அடைந்தான் என்க. 39 |