பரதன் கைகேயியை வணங்க அவள் உசாவுதல் 2143. | வந்து, தாயை அடியில் வணங்கலும், சிந்தை ஆரத் தழுவினள், ‘தீது இலர் எந்தை, என்னையர், எங்கையர்?’ என்றனள்; அந்தம் இல் குணத்தானும், ‘அது ஆம்’ என்றான். |
(பரதன்) வந்து - (தாய் இருக்குமிடம்) வந்து; தாயை - கைகேயியை; அடியில் - திருவடிகளில்; வணங்கலும் - வணங்கிய உடனே; (அவள்) சிந்தை ஆரத்தழுவினள் - மனத்திற் பொருந்த அணைத்து நின்று; ‘எந்தை என்னையர், எங்கையர் தீதிலர்’ என்றனள் - என் தந்தையும், என் தமயன்மாரும், என் தங்கையரும்தீமையின்றி நலமாக உள்ளனரோ என்று விசாரித்தாள்; அந்தம் இல் குணத்தானும் -அளவுபடாத நற்குண நிலையமாகிய பரதனும்; ‘அது ஆம்’ என்றான் - நலமாக உள்ள அத்தன்மைஅவ்வாறே உளதாம் என்று மறுமொழி கூறினான். அயோத்தியில் நிகழ்ந்த தீய நிகழ்ச்சிகளின் பாதிப்பு கைகேயியின் உள்ளத்திலும்உண்டாதலின் நெஞ்சுமிக்கது வாய் சோர்ந்து ‘நலமாக உள்ளனரோ’ என்ற விசாரிப்பைத் ‘தீதுஇலர்’ என்று விசாரிக்கச் செய்தது எனலாம். சூழலைப் பொறுத்துச் சொல்வரவு அமைதல் இதனால்விளங்கும். அந்தம் இல் குணம் - அளவுபடாத குணம். எல்லை இல்லாத (கணக்கிட முடியாத) குணம்“எல்லையில் குணங்களும் பரதற்கு எய்திய” (1468) என்றார் முன்னும். பரதனைக் குண்ங்களாற்சிறப்பித்தல் யாண்டும் கம்பர்க்கு இயல்பு. 42 பரதன் ‘தந்தை எங்குளார்’ என்று கேட்டல் 2144. | ‘மூண்டு எழு காதலால், முளரித் தாள் தொழ வேண்டினென், எய்தினென், உள்ளம் விம்முமால்’ ஆண் தகை நெடு முடி அரசர் கோமகன் யாண்டையான்? பணித்திர்’ என்று, இரு கை கூப்பினான். |
(பரதன் கைகேயியைப் பார்த்து) ‘மூண்டு எழு காதலால் - என் உள்ளத்திலிருந்து மேல் எழும்புகின்ற பெரு விருப்பத்தால்; முளரித் தாள் தொழ - (தயரத மன்னனது)தாமரையாகிய திருவடிகளை வழிபட; வேண்டினென்- விரும்பி; எய்தினென்-வந்துள்ளேன்; உள்ளம் விம்மும்- (தந்தையைக் காண) மனம் துடிக்கிறது; ஆண்தகை நெடுமுடிஅரசர் கோமகன் - ஆடவர் திலகமாய அருங்குணம் உடைய நீண்ட மகுடம் அணிந்த மன்னர்மன்னனாகிய தயரதன்; யாண்டையான்? - எவ்விடத்தான்?; பணித்திர்’ -சொல்லுங்கள்;’ என்று -; இரு கை கூப்பினான் - இரண்டு கைகளையும் குவித்துத் தாயைவணங்கினான். |