பக்கம் எண் :

பள்ளிபடைப் படலம் 499

உள்ள குற்றப் பகைகளாகிய உலோபம் முதலிய அனைத்தையும் அடித்துப்
போட்டு; யாவர்க்கும்
- எல்லா மக்களுடைய மனத்துக்கும்; உறுநெறி -
ஏற்ற வழியிலே; செலும் வள்ளியோய்!- நடக்கின்ற வள்ளலே!; மறந்து -
(தற்போது அதனை) மறந்து; உனக்கு உறு நெறி செலல் -உனக்கு ஏற்ற
வழியில் நடப்பது; ஒழுக்கின்ற பாலதோ? - நல்லொழுக்கத்திற்
சேர்ந்ததாகுமா?

     திரும்பத் திரும்பத் தொல்லை கொடுக்கும் பகையைக் ‘குறும்பு’ என்பது
வழக்கம். காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம்
எனப்பட்ட குற்றங்கள் ஆறனுள் காமமும், வெகுளியும்,  ‘சினக்குறும்பு’
‘காமத்தீ’ என முன்னடியிற் கூறப் பெறுதலின் ‘இனக்குறும்பு’ என்பது
ஏனைய நான்கையும் குறிக்கும். அகத்தே மறைந்திருந்து தொல்லை
கொடுப்பன ஆதலின் ‘குறும்பு’எனப்பெற்றன. பிறர்க்கு நன்மை செய்துவந்த
தயரதன் இறந்து தனக்கு நன்மை தேடியவனாக ஆனான்என்பது பரதன்
புலம்பல் - “மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன், என்னுயிர்க்கு
உறுவதும்செய்ய எண்ணினேன்” (1327) என்ற தயரதன் கூற்றை ஈண்டுக்
கருதுக. துறந்து செய்வதாகத் தயரதன்கூறியதை இறந்து செய்தானாகப்
பரதன் புலம்பினன் என அறிக. ‘ஓ’ வினாப்பொருட்டு.                49

2151. ‘முதலவன் முதலிய முந்தையோர் பழங்
கதையையும் புதுக்கிய தலைவன்! கண்ணுடை
நுதலவன் சிலை விலின் நோன்மை நூறிய
புதல்வனை, எங்ஙனம் பிரிந்து போயினாய்?

    ‘முதலவன் முதலிய - சூரிய குலத்து  முன்னோனாகிய ஆதித்தன்,
மனு,
  மாந்தாதா,  சிபி,  முசுகுந்தன்முதலிய; முந்தையோர் - முற்பட்ட
அரசர்களது; பழங்கதையையும் - நெடுநாட்பட்டவீர வரலாறுகளையும்;
புதுக்கிய - உன் வீரச் செயல்களால் உண்மை என்று உலகறியச்செய்த;
தலைவன்! - தலைவனாகிய தயரதனே!; நுதல்கண் உடையவன் -
நெற்றியிற்கண் உடையவனாகிய சிவபிரானது; சிலைவிலின் -
மேருமலையாகிய வில்லின்; நோன்மை -வலிமையை; நூறிய -
பொடியாகும்படி செய்த; புதல்வனை - பெருவீரனாகிய  இராமனை;
எங்ஙனம் பிரிந்து  போயினாய் - எவ்வாறு பிரிந்து  சென்றாய்?

     முன்னோர் கதைகளைத் தம் காலத்தவர் நம்ப வேண்டுதற்குத் தாமும்
வீரச்செயல்களைச்செய்து மெய்ப்பித்தல் வேண்டும். அதனால்,  இவ்வீர
வரலாறுகள் இக்குலத்தினர்க்கு இயல்பு,இயலாததன்று என்று உலகம்
உணருமாதலின் ‘புதுக்கிய’ என்றார். சிலை - -மலை; இங்கு மேருமலை;
‘இமயம்’ எனலும் ஒன்றே. “இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்”
(கலித்.38) என்றதும்காண்க. இனி, வில் செய்தற்குரிய சிலை என்னும்
மரத்தினாற் செய்யப்பட்ட வில் எனப் பொருள்உரைத்தல் சிவன் வில்லுக்கு
ஏற்புடைத்தாகாமை அறிக. ‘தலைவன்’ நெஞ்சிற்கு நெருக்கமாதரிலன்
அண்மைவிளி, இயல்பாய் நின்றது.  இராமனிடத்திற் பெருங்காதல் உடைய
தயரதன், மேலும் அவன்வீரச் செயல்கள் கண்டு அவனிடத்திற் கவரப்
பெற்றவன். அவனை எங்ஙனம் பிரிந்து செல்லவன்மை பெற்றான் என்ற
பரதன் புலம்பல் ‘இராமனைப் பிரிந்ததனால் தயரதன் இறந்தான்’ என்னும்
கருத்துக்கும் அடி அமைத்து  நிற்றல் காண்க.                       50