கைகேயி தான் வரம் பெற்றமை கூறல் 2166. | ‘வாக்கினால் வரம் தரக் கொண்டு, மைந்தனைப் போக்கினேன், வனத்திடை; போக்கி, பார் உனக்கு ஆக்கினேன்; அவன் அது பொறுக்கலாமையால், நீக்கினான் தன் உயிர், நேமி வேந்து’ என்றாள். |
‘வாக்கினால் - (தயரதன் தன்) வாய்மொழியால்; வரம்தர - (இரண்டு) வரங்களை (எனக்குத்) தர; கொண்டு - அவற்றைப் பெற்று; மைந்தனை வனத்திடை போக்கினேன் - (ஒரு வரத்தால்) மகனாகிய இராமனைக் காட்டிற்குச் செல்லச்செய்தேன்; போக்கி - (அவனை) அனுப்பிவிட்டு; உனக்குப் பார் ஆக்கினேன் -மற்றொரு வரத்தால் (பரதனாகிய) உனக்கு உலக ஆட்சியைச் செய்துவைத்தேன்; நேமி வேந்துஅவன் - ஆணைச் சக்கரம் உடைய வேந்தனாகிய அத்தயரதன்; அது பொறுக்கலாமையால் - (மகனைப் பிரிந்த) துயரம் பொறுக்கமாட்டாமையால்; தன் உயிர் நீக்கினான் -தன்னுயிரைப் போக்கிக் கொண்டான்;’ என்றாள் -. தன் செயல் எதுவும் இல்லை. முன்பு வரம் தந்தவன் தயரதன். அவன் இப்போது வரத்தைநிறைவேற்றித் தரப் பெற்றுக் கொண்டேன். தயரதன் தந்த வரத்தால் இவ்விரண்டு செயல்களும்நடந்தன. தானே வரம் தந்து பொறுக்காது தன் உயிரைப் போக்கிக் கொண்டான் என்று தன்மேல்பரதன் கோபப்படாதவாறு செய்தியைக் கூறினாள். ஆயினும், ‘போக்கினேன்’, ‘ஆக்கினேன்’ என்றஇரண்டும் அவள் அகங்காரத்தைக் காட்டி ‘நானே செய்தேன்’ என்று அவனைப்பரதனுக்கு இனம் காட்டின.‘அது’ என்னும் கட்டு இரண்டில் முன்னையதாகிய இராமன் வனம் புகுந்த செய்தியைக் குறித்து நின்றது. 65 பரதன் கொண்ட சீற்றம் 2167. | சூடின மலர்க் கரம், சொல்லின் முன், செவி கூடின; புருவங்கள் குனித்துக் கூத்து நின்று ஆடின; உயிர்ப்பினோடு, அழல் கொழுந்துகள் ஓடின; உமிழ்ந்தன, உதிரம் கண்களே! |
சூடின மலர்க்கரம் - தாய்முன் தலைமேற் குவித்திருந்த பரதன் கரமலர்கள்; சொல்லின்முன் - கைகேயி கூறிய வார்த்தை செவியை அடைதற்கு முன்னால்; செவி கூடின- காதுகளைப் பொத்திக் கொண்டன; புருவங்கள் குறித்து நின்று கூத்து ஆடின -(பரதன்) புருவங்கள் வளைந்து நின்று மேலே ஏறியும் கீழே இறங்கியும் நடனமிடுவனவாயின; உயிர்ப்பினோடு - அவன் மூச்சுக் காற்றுடனே; அழல் கொழுந்துகள் - நெருப்புச்சுவாலைகள்; ஓடின - வெளிவந்தன; கண்கள் உதிரம் உமிழ்ந்தன - கண்கள் இரத்ததைக்கக்கின. |