2170. | அஞ்சினர் வானவர்; அவுணர் அச்சத்தால் துஞ்சினர் எனைப் பலர்; சொரி மதத் தொளை எஞ்சின, திசைக் கரி; இரவி மீண்டனன்; வெஞ் சினக் கூற்றும், தன் விழி புதைத்ததே! |
(பரதன் பெருங் கோபம் கண்டு) வானவர் அஞ்சினர் - தேவர்கள் பயந்தார்கள்; எனைப்பலர் அவுணர் அச்சத்தால் துஞ்சினர் - எத்துணையோ பலராய அசுரர்கள் பயத்தால்இறந்தனர்; திசைக் கரி - திக்கு யானைகள்; மதம் சொரிதொளை - மதம்சொரிகின்ற மிகப் பல தொளைகள்; எஞ்சின - தூர்ந்துபோகப் பெற்றன; இரவி -சூரியன்; மீண்டனன் - மறைந்து போனான்; வெஞ்சினக் கூற்றும் - இயல்பிலேயே கொடுஞ்சினம் உடைய யமனும்; தன் விழி புதைத்தது - தன்னுடைய கண்களை (பரதனைக் காணஅஞ்சி) மூடிக் கொண்டான். அமுதுண்ட வானவர் அஞ்சினர்; அமுதுண்ணாத அவுணர் பயத்தால் துஞ்சினர்; அமரர் - மரிக்கும்தன்மை அற்றவர். பரதன் சீற்றத்தை உயர்வு நவிற்சியாக வருணித்தார். ‘ஏ’ஈற்றசை. 69 பரதன் இராமனுக்கு அஞ்சித் தாயைக் கொல்லாது விடுதல் 2171. | கொடிய வெங் கோபத்தால் கொதித்த கோளரி, கடியவள் தாய் எனக் கருதுகின்றிலன்; ‘நெடியவன் முனியும்’ என்று அஞ்சி நின்றனன்; இடிஉரும் அனைய வெம் மொழி இயம்புவான்; |
கொடிய வெங் கோபத்தால்- (பொங்கிப் புறப்பட்ட) மிகக் கொடிய வெகுளியால்; கொதித்த - (மனம்) சூடேறிய;கோளரி - சிங்கமாகிய பரதன்; கடியவள் - கடும்செயல் செய்தவளாகியகைகேயியை; ‘தாய்’ எனக் கருதுகின்றிலன் - (தன்னுடைய) தாய் என்றுநினைக்கவில்லை (ஆயினும் இவளைக் கொன்றால்); நெடியவன் முனியும் - மூத்தோனாகியஇராமன் கோபிப்பான்; என்று அஞ்சி நின்றனன் - என்று கருதிப் பயந்து கொல்லாமல்(தடைப்பட்டு) நின்றான்; இடி உரும் அனைய - பேரிடியை ஒத்த; வெம் மொழி - கொடியசொற்களை; இயம்புவான் - சொல்லத் தொடங்கினான். தன் மகனுக்குப் பழிவரும் செயலைச் செய்தவள் ஆதலின் தாய் அல்லள்; கொடுஞ்செயல்செய்தாள் ஆதலின் கொல்ல வேண்டும். ஆனால், கொன்றாலும் அது இராமனுக்கு உவப்பாகாது என்பதுகருதிக் கொல்லாமல் விட்டான் என்றார். பரதன் தாயாகிய கைகேயியைக் கொல்லநினைத்ததற்கும். கொல்லாமல் விட்டதற்கும் இராமன்மாட்டுக் கொண்ட பக்தியே காரணமாதல் அறிக. இடி உரும்-ஒரு பொருட் பன்மொழி. 2298, 2325-ஒப்பிட்டுணர்க. 70 |