பரதன் கோசலையின் திருவடி வணங்கச் செல்லுதல் கலிவிருத்தம் 2189. | இன்னணம், இனையன இயம்பி, ‘யானும், இப் பன்ன அருங் கொடு மனப் பாவிபாடு இரேன்; துன்ன அருந் துயர் கெட, தூய கோசலை பொன் அடி தொழுவேன்’ என்று, எழுந்து போயினான். |
இனையன - இத்தகைய சொற்களை (பரதன்); இன்னணம் இயம்பி - இவ்வாறுவிளங்கவுரைத்து; ‘யானும் -; இப்பன்ன அருங் கொடு மனப் பாவிபாடு இரேன் - இந்தப்பேசுதற்கு முடியாத கொடிய மனம்படைத்த பாவியாகிய கைகேயியின் பக்கலில் இனி இருக்க மாட்டேன்;துன்ன அருந்துயர் கெட - நெருங்குதற்கரிய துன்பம் நீங்க; தூய கோசலை - நன்மனம் படைத்த கோசலைத் தாயின்; பொன் அடி தொழுவேன் - பொலிவு நிறைந்ததிருவடிகளை வணங்குவேன்;’ என்று - என்ற சொல்லி; எழுந்து போயினான்-கைகேயியின் இடத்திலிருந்த புறப்பட்டுச் சென்றான். வான்மீகத்தில் - பரதனது புலம்பல் ஒலியைக் கேட்டுக் கோசலை, சுமித்திரைபால் ‘மகா’புத்திமானாகிய பரதன் வந்திருத்தலால் அவனைக் காண விரும்புகிறேன்’ என்று சொல்லிச்சுமித்திரையுடன் பரதன் இருக்குமிடத்திற்குப் புறப்பட்டனன். அப்போது பரதன் சத்துருக்கனனுடன் கோசலை இருக்கும் வீட்டிற்கு வந்தான் என்றுள்ளது. 88 கோசலையின் அடியில் பரதன் வீழ்ந்து வணங்கல் 2190. | ஆண்தகை, கோசலை அருகர் எய்தினன்; மீண்டும், மண் கிழிதர வீழ்ந்து, கேழ் கிளர் காண் தகு தடக் கையின் கமலச் சீறடி பூண்டனன்; கிடந்தனன்; புலம்பினான் அரோ! |
ஆண்தகை - ஆடவருள் சிறந்த பரதன்; மீண்டு - கைகேயி இருப்பிடத்திருந்துசென்று; கோசலை அருகர் எய்தினன் - கோசலைத் தாயின் அருகில் சென்று; மண்கிழிதர வீழ்ந்து - தரை பிளவுபடும்படி (தடாலெனக்) கீழே வீழ்ந்து வணங்கி; கேழ்கிளர்- நிறம் மிக்கு விளங்குகின்ற; காண்தகு தடக்கையின் - காண்பதற்குப் பொருந்திய நீண்டகைகளால்; கமலச் சீறடி - (கோசலையின்) தாமரைபோன்ற சிறிய பாதங்களை; பூண்டனன்கிடந்தனன் புலம்பினான்- பிடித்துக் கொண்டு (கீழேவிழுந்து) கிடந்தபடியே அழத்தொடங்கினான். |