‘மன்னர் மன்னவா!- இராச ராசனே!; முன்னை - உனக்கு முன்பாக அரசாண்ட; நும் குல முதலுளோர்கள் தாம்- நும்குலத்து முன்னோர்களுள்; யாவர் - எவர்; நின்னை நிகர்க்கும் நீர்மையார்!- உன்னை ஒத்த தன்மை உடையவர்கள்;’ என்று வாழ்த்தினாள் - பாராட்டி வாழ்த்துரைத்தாள். ‘யாவரே’ ஏகாரம் வினாப்பொருட்டு. வரத்தால் அரசு தேடிவரவும் வேண்டாம் என்றுவெறுத்தொதுக்கும் இராமனது குணம் பரதன் மாட்டும் கண்டனள் ஆதலின், பாராட்டி “மன்னர்மன்னவா” என்றாள். 119 சத்துருக்கனன் கோசலையை வீழ்ந்து வணங்கலும் வசிட்டன் வருதலும் 2221. | உன்ன நைந்து நைந்து, உருகும் அன்புகூர் அன்னை தாளில் வீழ்ந்து, இளைய அண்ணலும், சொன்ன நீர்மையால் தொழுது மாழ்கினான்; இன்ன வேலைவாய், முனிவன் எய்தினான்.* |
இனைய அண்ணலும் - (பரதன்) தம்பியாகிய சத்துருக்கனனும்; உன்ன நைந்து நைந்து உருகும் அன்புகூர் அன்னைதாளில் - நினைக்க மனம் கரைந்து கரைந்து, அன்பு மிகுந்த தாயாகிய கோசலையின்திருவடிகளில்; வீழ்ந்து - விழுந்து; சொன்ன நீர்மையால் - பரதன் சொல்லியதன்மை போலவே தொழுது அழுது சொல்லி மயங்கினான்; இன்ன வேலைவாய் - இத்தகையசமயத்தின் கண்; முனிவன் - வசிட்ட முனிவன்; எய்தினான் - அந்த இடத்துக்குவந்து சேர்ந்தான். ‘சொன்ன நீர்மையால்’ என்பதனால் பரதன் புலம்பிய போதே இளையவனும் புலம்பினான்என்க. இருவர்க்கும் இராமனைப் பிரிந்த துக்கமும், தந்தையை இழந்த துக்கமும்ஒன்றே. 120 பரதன் வசிட்டனை வணங்கலும் வசிட்டன் தழுவி அழுதலும் 2222. | வந்த மாதவன் தாளில், வள்ளல் வீழ்ந்து, ‘எந்தை யாண்டையான்? இயம்புவீர்?’ எனா, நொந்து மாழ்கினான்; நுவல்வது ஓர்கிலா அந்த மா தவன் அழுது புல்லினான். * |
வள்ளல் - பரதன்; வந்த மா தவன் தாளில் வீழ்ந்து - அங்கே வந்தவசிட்ட முனிவன் திருவடிகளில் விழுந்து; ‘எந்தை யாண்டையான் - என் தந்தையாகியதசரதன், எவ்விடத்தான்?; இயம்புவீர் - சொல்வீராக?;’ எனா - என்று; நொந்து மாழ்கினான் - மனம் கெட்டு மயங்கினான்; நுவல்வது ஓர்கிலா அந்த மாதவன் - சொல்வதற்கு வகையறியாத |