பக்கம் எண் :

626அயோத்தியா காண்டம்

அல்குலை; ஒளிப்பு அற தளிப்ப - மறைவு நீங்க வெளித் தோன்றச்
செய்ய; உள்ளத்து அயர்வுறும் - (இராமன் வனம் புகுந்த நாள்முதலாகப்
போகம்  இழத்தலின்) மனச்சோர்வுஅடைந்த; மதுகை மைந்தார்க்கு -
மனவலிமை  உடைய வீரர்களுக்கு; அயா வுயிர்ப்பு- வருத்தத்திலிருந்து
நீங்குதலை; அளித்தது - உண்டாக்கி (உற்சாகப்படுத்தி)யது.

     துடுப்பு வீசும் துளிகளால் மகளிர் ஆடை நனைந்தது; அல்குல்
வெளித்தோன்றியது; மைந்தர்க்குமகிழ்ச்சி விளைந்தது என்க. கோசல நாட்டு
வீரர்கள் இராமன் வனம் புகுந்தது முதல் சோகத்தில்மூழ்கினர். அவர்கள்
மகளிரும் சோகத்தில் இருந்தனர். ஆதலின், போகம் இன்றி இருத்தலால்
அயர்வு உண்டாயிற்று. போக உறுப்புகள் காணப்பட்டபடியால் மைந்தர்க்கு
அயர் நீங்கியதுஎன்றார். துக்கம் பரதன் முதலானோர்க்கு இருக்கும் அன்றி
இராமனை அழைத்து வரச் செல்கிறோம்என்று கருதிச் செல்லும்
வீரர்களுக்கும் இருக்கவேண்டும் என்பது இல்லை யாதலின் அவ்வீரர்
போகவாய்ப்பை நாடினர் என்று சிருங்காரசம் படக் கூறினார்; உலகியல்
அறிந்தவர் கம்பர்என்பதை இது விளக்கும. ‘அம்மா’ வியப்பிடைச் சொல்.
‘ஒளிப் புறத்து அளிப்ப’ என்று பாடம்தந்து  பிரித்து அல்குலின் ஒளியைப்
புறத்து  அளிப்ப என்று  உரை கூறலாம் எனில் அல்குலுக்கு ஒலிஇல்லை;
இருப்பதாகக் கூறிய மரபும் இல்லை ஆதலின், கூறலாகாமை உணர்க.     56

மரக்கலங்கள் சென்று சென்று மீளும் காட்சி  

2359. இக் கரை இரைத்த சேனை
     எறி கடல் முகந்து, வெஃகி,
அக் கரை அடைய வீசி, வறியன
     அணுகும் நாவாய்-
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன
     போக்கிப் போக்கி,
அக் கணத்து உவரி மீளும்
     அகல் மழை நிகர்த்த அம்மா!

     இக் கரை - (கங்கையின்) வடகரையில் உள்ள; இரைத்த சேனை
எறிகடல்
-ஒலித்துக்கொண்டுள்ள சேனையாகிய அலைகடலை; வெஃகி
முகந்து
- விரும்பிஏற்றுக்கொண்டு; அக்கரை - தென்கரையில்; அடைய
வீசி - முழுவதும் இறக்கிவிட்டு; வறியன - ஒன்றும் இல்லாதனவாய்;
அணுகும் - (வடகரை வந்து) சேரும்; நாவாய் - மரக்கலம்; அலை ஆழி
புக்கு
- அலை வீசும் கடலின் கண் புகுந்து; நல் நீர் -மிகுதியான நீரை;
பொறுத்தன - சுமந்தனவாய்ப் (புறப்பட்டு); போக்கிப் போக்கி -
(மழைப்பெய்து) கழித்துக் கழித்து;  அக்கணத்து - அடுத்த கணத்திலேயே;
உவரிமீளும் - (மீண்டும் முகப்பதற்காகக்) கடலுக்குத் திரும்புகின்ற; அகல்
மழை
- அகன்ற மேகத்தை;  நிகர்த்த - ஒத்திருக்கின்றன.