பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 645

மேல், கீழ் நிலைகளைச் சுட்டி நின்றது - “சிவிகை பொறுத்தானோடு
ஊர்ந்தானிடை” (குறள் 37.) என்பது காண்க. கூந்தல் அழகு பிற
அழகுகளுக்கும் உபலக்கணையாம்.“குஞ்சி அழகும்” “மயிர் வனப்பும்”
என்பன (நாலடி. 131. சிறுபஞ்ச. 35) காண்க. “ஏந்துசெல்வத் திமையவர்”
என்றது  உலகில் மனிதர் செல்வத்தை ஏந்துவர்; ஆனால் இமையவரைச்
செல்வம் ஏந்துகிறது என்ற நயம் பற்றி ‘ஏ’ ஈற்றசை.                   12

2387.மாதர் யாவரும், வானவர் தேவியர்
கோது இல் செல்வத்து வைகினர் - கொவ்வை வாய்த்
தீது இல் தெய்வ மடந்தையர், சேடியர்,
தாதிமார் எனத் தம் பணி கேட்பவே.

     மாதர் யாவரும்- (பரதனுடன் வந்த) மகளிர் எல்லாரும்; கொவ்வை
வாய்த்தீது  இல் தெய்வ மடந்தையர் -
கொவ்வைக் கனி போலச்
சிவந்த வாயினை உடைய தீமையற்றதேவ மகளிர்;  சேடியர் தாதிமார்
என
- தோழிப் பெண்களும்,  குற்றேவல் மகளிரும்போல்;  தம் பணி
கேட்ப
- தாம் இட்ட வேலைகளை நிறைவேற்ற; வானவர் தேவியர்
கோது இல் செல்வத்து
- வானுலகத்துத் தேவர் மகளிரது குற்றமற்ற
செல்வத்தில்; வைகினர்- இன்புற்றிருந்தனர்.

     ஆடவர் அரம்பை மகளிர் இன்பம் துய்த்தலால் மகிழ்ந்தனர்.
மகளிரோ மற்றுத் தேவப்பெண்களைப் பணிகோடலால் மகிழ்ந்தனர்
என்றவாறாம். தெய்வமடந்தையர் வானவர் தேவியரின்வேறுபட்டவர்
ஆவர். ‘ஏ’ ஈற்றசை.                                            13

2388.நந்து அம் நந்தவனங்களில், நாள் மலர்க்
கந்தம் உந்திய கற்பகக் காவினின்று,
அந்தர் வந்தென, அந்தி தன் கை தர,
மந்த மந்த நடந்தது வாடையே.

     நந்து அம் நந்த வனங்களில் - (அங்குள்ள) வளர்ச்சி பெற்ற
அழகியபூந்தோட்டங்களில்; நாள் மலர்க் கந்தம் உந்திய கற்ப்கக்
காவின் நின்று -
அன்றலர்ந்த மலர்களின் நறுமணம் பெருக வரும் கற்பகச்
சோலைகளிலிருந்து; அந்தி தன் கை தர- மாலைப்பொழுது கை
கொடுத்துவ; அந்தர் வந்து என - குருடர் நடந்ததுபோல;  வாடை-
வாடைக் காற்று;  மந்த மந்த நடந்தது - மெல்ல மெல்ல மணம் வீசி
வந்தது.

     கற்பகச் சோலைகளிலிருந்து வந்த வாடைக் காற்று அங்குள்ள
பூந்தோட்டங்களின் நறுமணம்பெருக வருதலால் மெல்ல மெல்லக் குருடர்
போல நடந்தது  என்றார். அதிரக் குளிர் செய்து  வரும்வாடையும் மந்த
மாருதமாக ஆயினது  மலர்களின் நறுமணம் கலத்தலான் என்க. வாடை -
வடக்கிருந்து வரும் குளிர் காற்று.  அது  தென்றல் ஆகாமை  உணர்க,
திசைப்பெயராதலின்.  தென்றல் - மந்தமாருதம்.  இங்கு வாடையும் மந்த
மாருதமாயிற்று  என்றது நயம் மந்த மந்த - அடுக்கு ‘ஏ’ஈற்றசை.       14